நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக்குண்டு வீச்சு: கைதான நீலம் ஆசாத்தின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி


நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக்குண்டு வீச்சு: கைதான நீலம் ஆசாத்தின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி
x

நாடாளுமன்றத்தில் மக்களவைக்குள் 2 பேர் அத்துமீறி புகுந்து வண்ண புகை குண்டுகளை வீசினர்.

புதுடெல்லி,

கடந்த 13-ந் தேதி நாடாளுமன்றத்தில் மக்களவைக்குள் 2 பேர் அத்துமீறி புகுந்து வண்ண புகை குண்டுகளை வீசினர். அதே நேரத்தில் நாடாளுமன்றத்தின் வெளியேயும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் வண்ண புகை குண்டுகளை வீசியபடி கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மக்களவைக்குள் அத்துமீறி புகுந்ததாக சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகியோர் மற்றும் அவர்களது கூட்டாளிகளான அமோல் தன்ராஜ் ஷிண்டே, நீலம் அசாத், லலித்ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். தற்போது 6 பேரும் வருகிற 5-ந்தேதிவரை போலீஸ் காவலில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைதான 6 பேரில் நீலம் ஆசாத் என்ற பெண் தனக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை மீறப்படுவதாகக் கூறி டெல்லி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலம் ஆசாத்தின் ஜாமீன் மனு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதால் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்று காவல்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். வாதத்தை ஏற்று கொண்ட டெல்லி ஐகோர்ட்டு, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தது. மேலும் இதுபோன்ற ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என டெல்லி ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.


Next Story