அசாமில் வந்து ஊழல்வாதி என கூறி பாருங்கள்; கெஜ்ரிவாலுக்கு முதல்-மந்திரி ஹிமந்தா சவால்


அசாமில் வந்து ஊழல்வாதி என கூறி பாருங்கள்; கெஜ்ரிவாலுக்கு முதல்-மந்திரி ஹிமந்தா சவால்
x

அசாமில் எனக்கு எதிராக ஊழல்வாதி என கூறி பாருங்கள் என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு, அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா சவால் விடுத்து உள்ளார்.

கவுகாத்தி,

டெல்லி சட்டசபையில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசும்போது, அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை கடுமையாக சாடி பேசினார். நாட்டின் பிற மாநிலங்களில் ஹிமந்தாவுக்கு எதிராக வழக்குகள் உள்ளன என கூறினார்.

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் நாளை (ஏப்ரல் 2) முதன்முறையாக அசாமில் அரசியல் பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

அசாமில் பா.ஜ.க. தலைமையிலான அரசில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், முதல்-மந்திரி ஹிமந்தா ஆவேசமுடன் பேசும்போது, டெல்லி சட்டசபையில், என்னை பாதுகாத்து கொள்ள நான் இல்லை என்று தெரிந்த நீங்கள் என்னை பற்றி பேசியிருக்க கூடாது.

எனக்கு எதிராக என்ன வழக்கு உள்ளது? என கூறுங்கள் பார்ப்போம். அதனால், எனக்கு எதிராக சில வழக்குகள் உள்ளன என்பது போல் சிலர் அனைத்து மக்களையும் தவறாக வழி நடத்துகின்றனர்.

காங்கிரஸ் கட்சியால் பல்வேறு நீதிமன்றங்களில் எனக்கு எதிரான சில வழக்குகளை தவிர, ஒட்டுமொத்த இந்தியாவிலும் எனக்கு எதிராக வழக்குகளே இல்லை என அவர் கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் போன்ற கோழை சட்டசபையில் பேசுகிறார். அதனால், ஏப்ரல் 2-ந்தேதி அவர் அசாமுக்கு வரட்டும். ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு எதிராக ஒரு வழக்கு உள்ளது என அவர் கூறட்டும். அதன்பின்னர், அவருக்கு எதிராக நான் அவதூறு வழக்கு தொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

எனக்கு எதிராக ஊழல்வாதி என ஒரு வார்த்தை அவர் பேசட்டும். அடுத்த நாளே, மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக வழக்கு தொடுத்தது போன்று, கெஜ்ரிவால் மீது நான் அவதூறு வழக்கு போடுவேன் என அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பேசியுள்ளார்.


Next Story