'தெளிவான வரையறைகளுடன் திட்டங்களை கொண்டு வாருங்கள்' - மந்திரிசபை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்


தெளிவான வரையறைகளுடன் திட்டங்களை கொண்டு வாருங்கள் - மந்திரிசபை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
x

டெல்லியில் அடுத்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் வரும் மார்ச் 3-ந்தேதி மந்திரிசபை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சாணக்யபுரி தூதரக வளாகத்தில் அமைந்துள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் மந்திரிசபை கூட்டம் நடைபெற உள்ளது.

அரசாங்கத்தின் நிர்வாகம், கொள்கை விவகாரங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அவ்வபோது மந்திரிசபை கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நடைபெறும் இந்த மந்திரிசபை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மந்திரிசபையில் தெளிவான வரையறைகளுடன், செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் மற்றும் தெளிவான அளவீடுகளுடன் கூடிய திட்டங்களை கொண்டு வருமாறு மந்திரிசபை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக கடந்த 21-ந்தேதி, அடுத்த 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை தயாரிக்குமாறு மந்திரிசபை உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

எதிர்வரும் மக்களவை தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது 3-வது ஆட்சிக்காலத்திற்கான செயல்திட்டங்களை தயாரிக்க தொடங்கிவிட்டதாகவும், இதற்காக சுமார் 15 லட்சம் மக்களிடம் இருந்து பரிந்துரைகளை பெற்றுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story