சென்னை, மதுரையில் சோதனை: கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள்
கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
புதுடெல்லி,
சென்னை, மதுரையில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
வருமானவரித்துறை மக்கள் தொடர்பு கமிஷனர் சுரபி அக்லுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வருமான வரித்துறை இந்த மாதம் 20-ந்தேதி, ரியல் எஸ்டேட் நிறுவனம், சாலை மற்றும் ரெயில்வே கட்டுமான குத்தகை நிறுவனம் என 2 தனியார் நிறுவனங்களில் சோதனை நடத்தியது. மதுரை, சென்னை என 30 வெவ்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் பல ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.
ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சார்ந்தவர்கள் கணக்கில் வரப்படாத பணப்பரிவர்த்தனை மூலம் வரி ஏய்ப்பு செய்தது ஆதாரத்துடன் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனத்தினர் சாப்ட்வேர் (மென்பொருள்) பயன்படுத்தி இந்த கணக்கில் வராத பணத்திற்காக தனியே கணக்குகளை பராமரித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
கட்டிட ஒப்பந்தங்களை செய்து வந்த மற்றொரு நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதற்காக, போலியான துணை ஒப்பந்தங்கள் கடனில் இருப்பது போலவும், மேலும் கட்டுமான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியது போலவும் போலியான சீட்டுகளின் (வவுச்சர்கள்) மூலம் வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது. இது போன்று ஒப்பந்தத்திற்கான பணத்தை துணை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்குவது போல் வங்கிகளில் பரிவர்த்தனை செய்து மீண்டும் தங்களது நிறுவனத்திற்கே வரும் வகையில் மோசடியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.
இந்த சோதனையில் ரூ.150 கோடிக்கும் மேலான கணக்கில் வரப்படாத பணம் வெளிக்கொண்டு வரப்பட்டது. கணக்கில் வரப்படாத ரொக்க பணம் ரூ.14 கோடியும், ரூ.10 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் ஆபரணங்கள் கூடுதலாக இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.