உங்களுடன் போட்டியிடுங்கள்; மற்றவர்களுடன் அல்ல - பிரதமர் மோடி அறிவுரை


உங்களுடன் போட்டியிடுங்கள்; மற்றவர்களுடன் அல்ல - பிரதமர் மோடி அறிவுரை
x

இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள் மாணவர்கள் என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பரிக்ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டு முதல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, தேர்வு நேரத்தில் அனைவரிடமும் எழும் பயம், மன அழுத்தம் உள்ளிட்டவைகளை எப்படி அணுகுவது, அவற்றை எப்படி களைவது என்பன குறித்து அறிவுரை வழங்கி வருகிறார். ஆண்டுதோறும் பல லட்சம் பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில், பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி 7வது ஆண்டாக இன்று நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மதிப்பெண் அட்டையை விசிட்டிங் கார்டாக கருதுகின்றனர். ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒருபோதும் ஒப்பிட கூடாது. அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.

மாணவர்கள் மற்றவர்களோடு போட்டி போடாமல் தங்களோடு தாங்களே போட்டி போட வேண்டும். வாழ்க்கையில் போட்டிகள் இருக்க வேண்டும், ஆனால் அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கும், அதனை சமாளிக்க நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் மாணவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தங்களைத்தாங்களே தாழ்த்திக்கொள்கிறார்கள். படிக்கும்போது நீங்கள் சிறிய இலக்குகளை நிர்ணயித்து, படிப்படியாக உங்கள் படிக்கும் செயல்திறனை மேம்படுத்த வேண்டும். இந்த வழியை நீங்கள் பின்பற்றினால் தேர்வுக்கு முன்பே முழுமையாக தயாராகிவிடுவீர்கள்.

இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள் மாணவர்களான நீங்கள்தான். பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி தனக்கும் ஒரு தேர்வு போன்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடும் பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி, ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரபூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும்.


Next Story