மருத்துவ படிப்பிற்கு நன்கொடை வசூலித்ததாக புகார்: பிஷப் தர்மராஜ் ரசாலம் வெளிநாடு செல்ல தடை
மருத்துவ படிப்பிற்கு நன்கொடை வசூலித்ததாக புகார் எதிரொலியாக பிஷப் தர்மராஜ் ரசாலம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
குமரி- கேரள எல்லை அருகே உள்ள காரக்கோணத்தில் சி.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் ரூபாய் நன்கொடை வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதில் தொடர்புடைய சி.எஸ்.ஐ. பிஷப் தர்மராஜ் ரசாலம் என்பவரின் திருவனந்தபுரத்தில் உள்ள வீடு, அலுவலகம், காரக்கோணம் மருத்துவ கல்லூரி மற்றும் சி.எஸ்.ஐ. சபை செயலாளர் பிரவீன் வீடு உள்பட 4 இடங்களில் நேற்றுமுன்தினம் ஒரே நேரத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இன்று (புதன்கிழமை) கொச்சியில் உள்ள அமலாக்க இயக்குனர் அலுவலகத்தில் ஆஜராக பிஷப் தர்மராஜ் ரசாலத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பிஷப் தர்மராஜ் ரசாலம் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு லண்டன் செல்வதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். அவரை அமலாக்க துறை அதிகாரிகள் வெளிநாடு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். பிஷப் தர்மராஜ் ரசாலம் இன்று கொச்சி அமலாக்க இயக்குனரகத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.