அரசு நிலத்தை விடுவித்து ரூ.200 கோடி முறைகேடு செய்ததாக சித்தராமையா மீது லோக் அயுக்தாவில் புகார்


அரசு நிலத்தை விடுவித்து ரூ.200 கோடி முறைகேடு செய்ததாக சித்தராமையா மீது லோக் அயுக்தாவில் புகார்
x

அரசு நிலத்தை விடுவித்து ரூ.200 கோடி முறைகேடு செய்ததாக சித்தராமையா மீது லோக் அயுக்தாவில் பா.ஜனதா புகார் அளித்து உள்ளது.

பெங்களூரு:

சித்தராமையா மீது புகார்

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மீது பா.ஜனதாவை சேர்ந்த என்.ஆர்.ரமேஷ் லோக் அயுக்தாவில் ரூ.200 கோடி நில முறைகேடு புகார் ஒன்றை நேற்று அளித்தார். இதன்பின்னர் என்.ஆர்.ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு சித்தாப்புரா கிராமம் கசபா ஓப்ளியில் சர்வே எண் 27/1, 28/4, 28/5, 28/6-ல் 2 ஏக்கர் 39 குவிண்டால் அரசின் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு அசோக் தாரிவால் என்ற நபருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்து உள்ளது.

சி.பி.ஐ. விசாரணை

இந்த நிலத்தில் குடியிருப்பு வளாகங்கள் கட்ட அசோக் தாரிவால் 2 முறை அனுமதி கேட்டு உள்ளார். ஆனால் அரசு மறுத்துவிட்டது. விதிகளின்படி அந்த நிலததில் கட்டுமான பணிகள் நடப்பது சட்டவிரோதமானது. அந்த நிலத்தின் எல்லைக்குள் தோட்டங்கள் இருப்பதால் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

சட்டம் படித்து உள்ள சித்தராமையா சாதுரியமாக செயல்பட்டு இந்த சட்டவிரோத செயலை செய்து உள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக சித்தராமையா, பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் செயலாளர் சாம்பட் மீது லோக் அயுக்தாவில் புகார் அளித்து உள்ளேன். இந்த முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. அல்லது சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story