உடுப்பி, சிக்கமகளூருவில் குவிந்த சுற்றுலா பயணிகள்


உடுப்பி, சிக்கமகளூருவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 28 May 2023 6:45 PM GMT (Updated: 28 May 2023 6:46 PM GMT)

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி உடுப்பி, சிக்கமகளூருவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மங்களூரு,

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி உடுப்பி, சிக்கமகளூருவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அரபிக்கடலில் சிக்கிய பெங்களூரு வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஞாயிறு விடுமுறை

கர்நாடகத்தில் கோடைகாலத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், கோடை விடுமுறை முடிய உள்ளதாலும் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்தனர். இதனால் சுற்றுலா தலங்கள் நிரம்பி வழிந்தது.

இதேபோல், கடலோர மாவட்டமான உடுப்பியிலும், மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவிலும் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக தான் இருந்தது.

மக்கள் கூட்டம்

கடும் வெயில் வாட்டி வதைத்து வந்ததால், மக்கள் வெப்பத்தை தணிக்க உடுப்பி மாவட்டம் மல்பேயில் உள்ள கடலில் நீராடினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மல்பே கடற்கரையில் மக்கள் குவிந்தனர். இதனால் மல்பே கடற்கரையில் வரலாறு காணாத வகையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அரபிக்கடலில் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்ந்தனர். போலீசாரும், கடலோர காவல் படையினர் எச்சரித்தும் காதில் வாங்காமல், கடலில் ஆபத்தான முறையில் குளியல் போட்டனர். சுற்றுலா பயணிகளை தடுக்க முடியாமல் போலீசாரும், கடலோர காவல் படையினரும் திணறினர்.

அரபிக்கடலில் மூழ்கிய வாலிபர்

இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து நண்பர்கள் 5 பேருடன் சுற்றுலா வந்த சச்சின் (வயது 25) என்பவர் அரபிக்கடலில் எச்சரிக்கையை மீறி குளித்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கிய அவர், கடலுக்குள் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், கடலோர காவல் படையினா் உதவியுடன் சச்சினை மீட்டனர்.

பின்னர் அவரை கடலோர காவல் படையினர் மீட்டு சிகிச்சைக்காக உடுப்பி மணிப்பால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிக்கமகளூரு

இதேபோல், சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலும் மக்கள் குவிந்தனர். இங்குள்ள முல்லையன்கிரி, பாபாபுடன்கிரி மலை, மாணிக்கதாரா அருவி, ஒன்னமன் அருவி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் சிக்கமகளூரு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல், சிக்கமகளூரு ஒரநாடு அன்னபூர்னேஸ்வரி அம்மன் கோவில், சிருங்கேரி சாரதம்மா கோவிலிலும் பக்தர்கள் குவிந்தனர்.


Next Story