சோனியா காந்தியுடன் மோதல்: ஸ்மிரிதி இரானி வீட்டு முன் காங்கிரசார் போராட்டம்
சோனியா காந்தியுடன் ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக, ஸ்மிரிதி இரானி வீட்டு முன் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் ஜனாதிபதி அவமதிப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நேருக்கு நேர் மோதினார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள அவரது வீட்டு முன்பு நேற்று இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் கூறுகையில், 'மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மக்களவையில் அநாகரிகமாக நடந்து கொண்டார். பா.ஜனதாவின் போக்கிரித்தனத்தை நாடாளுமன்றம் கண்டது. பா.ஜனதா எம்.பி.க்கள் சோனியா காந்தியுடன் சேர்ந்து நாட்டின் கோடிக்கணக்கான பெண்களையும் அவமதித்துள்ளனர்' என சாடினார்.
சட்டவிரோத பார் ஊழல் அம்பலமானதையடுத்து ஸ்மிரிதி இரானி கடும் கோபத்தில் இருப்பதாக கூறிய சீனிவாஸ், அவரது நேற்றைய நடத்தையால், நாடாளுமன்றத்தின கண்ணியம் கெட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.