நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும்; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும்; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நாளை (இன்று) நடக்கிறது. இதில் 24 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலை கூட்டாக எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. நமது நாட்டின் பொருளாதாரத்தை பா.ஜனதா சீர்குலைத்துவிட்டது. மோடி பிரதமராக வந்த பிறகு ஏழைகள், நடுத்தர மக்கள், கூலித் தொழிலாளர்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பா.ஜனதாவின் மதவாத அரசியலால் மக்கள் ஆதங்கத்துடன் வாழ்கிறார்கள். இது தான் பா.ஜனதா நாட்டுக்கு அளித்த கொடை. கா்நாடகத்தில் மோடியை நாங்கள் சரியான முறையில் எதிர்கொண்டோம். சட்டசபை தேர்தலின்போது, மோடி கர்நாடகத்திற்கு 28 முறை வந்து பிரசாரம் மேற்கொண்டார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடகத்தில் இருந்து பா.ஜனதாவின் முடிவு தொடங்கியுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு அறுதி பெரும்பான்மை பலம் கிடைக்காது. ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு கொள்கையே கிடையாது. பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அக்கட்சியின் மதச்சார்பற்ற கொள்கை என்ன ஆனது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றபோது 21 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதனால் எந்த மாற்றமும் நடைபெறவில்லை என்று குமாரசாமி சொல்கிறார். அவர் அந்த ஒற்றுமையை முன்னெடுத்து செல்லவில்லை. அதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story