மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு


மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி  வேட்பாளர்கள்  - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
x

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்.

புது டெல்லி,


நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 18 பேரும் அடங்குவார்கள். இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி முடிவடைகிறது.

அதாவது, தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இதேபோல், மேலும் 14 மாநிலங்களை சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிகிறது. எனவே, மொத்தம் உள்ள 57 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்க இருக்கிறது.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்கள் குறித்து அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை நடைபெறு உள்ளதாகவும் ,லண்டனில் உள்ள ராகுல்காந்தி காணொலி மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தெரிகிறது. இதன் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, விவேக் தங்கா, அஜய் மக்கன், ராஜீவ் சுக்லா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோரும் களத்தில் உள்ளதாக தெரிகிறது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் போட்டியிட சிதம்பரத்திற்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

வேட்பாளர் பட்டியல் வெளியானவுடன் இன்று ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story