லிங்காயத் சமூகத்தை உடைக்க காங்கிரசால் சாத்தியமில்லை; டி.கே.சிவக்குமாருக்கு, பசவராஜ் பொம்மை பதிலடி
லிங்காயத் சமூகத்தை உடைக்க காங்கிரசால் சாத்தியமில்லை என்று டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார்.
பெங்களூரு:
அணை உடைந்தது
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் மூத்த தலைவர்களும், லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்களுமான ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளனர். அவர்கள் மூலமாக பா.ஜனதாவின் வாக்கு வங்கியான லிங்காயத் சமூகத்தின் ஓட்டுக்களை பிரிக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. லிங்காயத் சமூக வாக்குகள் காங்கிரசுக்கு கிடைத்தால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்பது காங்கிரஸ் தலைவர்களின் கணக்காக உள்ளது.
இநத நிலையில், பா.ஜனதாவின் லிங்காயத் சமூக அணை உடைந்து தண்ணீர் ஓடுவதாகவும், புதிதாக அணை கட்டி, பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
காங்கிரசால் சாத்தியமில்லை
லிங்காயத் அணை பற்றி டி.கே.சிவக்குமார் பேசி இருக்கிறீர்கள். லிங்காயத் சமூகம் எவ்வளவு பலமானது என்று டி.கே.சிவக்குமாருக்கு தெரியவில்லை. லிங்காயத் அணை பலமானது. அதனை உடைக்க கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது முயற்சி செய்தீர்கள். அது நடைபெறவில்லை. தற்போது பா.ஜனதா ஆட்சி நடக்கிறது.
தற்போது லிங்காயத் சமூகத்தை உடைக்க சாத்தியமா?. முதலில் காங்கிரஸ் கட்சியின் குளத்தில் தண்ணீர் இல்லை. அதுபற்றி டி.கே.சிவக்குமார் சிந்திக்க வேண்டும். லிங்காயத் சமூக அணையை உடைக்க காங்கிரசால் சாத்தியமில்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.