உண்மையை சுப்ரீம் கோர்ட்டில் விவரிப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வி-முன்னாள் மந்திரி சி.டி.ரவி பேட்டி

உண்மையை சுப்ரீம் கோர்ட்டில் விவரிப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று முன்னாள் மந்திரி சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இந்தியா கூட்டணியில் சேர காவிரி நீரை திறக்க வேண்டும் என்று தி.மு.க. மிரட்டியதா?. இல்லாவிட்டால் காங்கிரஸ் மேலிடம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும். அதனால் தான் தமிழகத்திற்கு காவிரி நீரை இந்த அரசு திறந்துவிட்டுள்ளது. காவிரி நீரை திறந்துவிட்ட பிறகு அனைத்துக்கட்சி கூட்டம், எம்.பி.க்கள் கூட்டத்தை இந்த அரசு நடத்தியுள்ளது. கர்நாடக விவசாயிகளின் நலனை காப்பதற்கு பதிலாக தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் பெற முயற்சி செய்துள்ளனர். இதற்கு கர்நாடகம் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசு தொடக்கம் முதலே சந்தேகப்படும்படியாக நடந்து வந்துள்ளது. அதனால் நமக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வந்துள்ளது. உண்மையை சுப்ரீம் கோர்ட்டில் விவரிப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துவிட்டது. தமிழ்நாடு அரசு கேட்பதற்கு முன்பே கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிட்டுள்ளது. நமக்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்தும், அதை பற்றி கவலைப்படாமல் நீர் திறந்துவிட்டுள்ளனர். கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் காலியாகிவிட்டன.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.






