காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகத்தை தமிழகத்திடம் காங்கிரஸ் அடகு வைத்துவிட்டது
நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகத்தை தமிழகத்திடம் காங்கிரஸ் அடகு வைத்துவிட்டது என குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவருமான குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
நமக்கே நீர் இல்லை
மேகதாது விஷயத்தில் பாதயாத்திரை நடத்திய காங்கிரசார் மக்களின் தலையில் தொப்பி போட்டுள்ளனர். இப்போது இந்தியா கூட்டணிக்கு உயிர் கொடுக்க காவிரி விஷயத்தில் கர்நாடகத்தின் நலனை விட்டுக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் நமக்கு இருந்த பயம் உண்மையாகியுள்ளது. காங்கிரஸ் அரசு கன்னடர்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு கோர நம்பிக்கை துரோகம் செய்துள்ளது.
மழை பற்றாக்குறைவால் அணைகள் நிரம்பவில்லை. விவசாயிகளின் பயிர்களுக்கு நீர் இல்லை. பெங்களூருவில் குடிநீருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நமக்கே நீர் இல்லை. அண்டை வீட்டுக்கு நீர் கொடுக்க இந்த அரசு தயாராகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விட்டு இருப்பதன் மூலம் அந்த மாநிலத்துடன் அரசியல் ரீதியாக நல்லிணக்கத்துடன் காங்கிரஸ் செயல்படுகிறது. இது இன்னொரு உத்தரவாத திட்டமா?.
சரண் அடைந்துவிட்டனர்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தங்களது கூட்டணி வெற்றி பெற காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகத்தின் நலனை தமிழகத்திடம் காங்கிரஸ் அடகு வைத்துள்ளது. தமிழ்நாட்டிற்கு பயந்து அதனிடம் சரண் அடைந்துவிட்டனர். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்பு செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மாநிலத்திடம் சரண் அடைந்தது கன்னடர்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 1962-ம் ஆண்டு காவிரி படுகை விவசாயிகளுக்காக தேவேகவுடா தனது உயிரையே அர்ப்பணித்தார். இதற்கு முன்பு இருந்த அரசுகள் தமிழ்நாட்டுக்கு சவால் விட்டு கர்நாடகத்தின் நலனை பாதுகாத்தன. தமிழ்நாடு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த உடனேயே அதற்கு பயந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இடர்ப்பாடு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் அரசு விளக்கவில்லை.
விளக்க வேண்டும்
சட்ட ஆலோசனை நடத்தாமல், எதிர்க்கட்சிகளிடம் கருத்து கேட்காமல் காற்று வேகத்தில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்து விட்டதின் உள் ரகசியம் என்ன?. இது மக்களுக்கு தெரிய வேண்டும். நீர்ப்பாசனத்துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி, அவர் மந்திரியாக இருப்பது கர்நாடகத்திற்கா? அல்லது தமிழ்நாட்டிற்கா?. இதுகுறித்து அவர் விளக்க வேண்டும்.
காவிரி அணைகளின் சாவி மத்திய அரசிடம் இருப்பதாக இருந்தால் கர்நாடக அரசின் பொறுப்பு என்ன?. அந்த சாவி தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உள்ளதா? அல்லது சோனியா காந்தி கையில் இருக்கிறதா?. தைரியம் இருந்தால் விவசாயிகள் கோர்ட்டுக்கு போகலாம் என்று டி.கே.சிவக்குமாா் கூறி இருப்பது மிரட்டும் போக்கு. தினமும் ஆயிரக்கணக்கான கனஅடி நீர் தமிழ்நாட்டிற்கு சென்றுக் கொண்டு இருக்கிறது. அத்துடன் இப்போது, 10 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) திறந்து விடுவதாக கூறி இருப்பது சரியல்ல.
மழை பற்றாக்குறை
காவிரி மேலாண்மை ஆணையமே கர்நாடகத்தில் மழை பற்றாக்குறைவால் ஏற்பட்டுள்ள நீர் இடர்ப்பாட்டு சூழ்நிலை குறித்து புள்ளி விவரங்களுடன் கூறியுள்ளது. இதுகுறித்து நீர்ப்பாசனத்துறை மந்திரிக்கு தெரியாதா?. காவிரி விஷயத்தில் காங்கிரசாருக்கு 2 நாக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சி காவிரி விஷயத்தில் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. இந்த அநீதியை சகித்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டு இருப்பதை உடனே நிறுத்த வேண்டும். இடர்ப்பாட்டு கால சூத்திரத்தை பயன்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.