தேர்தல் எப்போது நடத்தினாலும் அதை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது - டி.கே.சிவக்குமார்


தேர்தல் எப்போது நடத்தினாலும் அதை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது - டி.கே.சிவக்குமார்
x

பா.ஜனதாவினர் எந்த விதமான நிபந்தனையும் இன்றி காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். வரும் நாட்களில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள சிலரும் எங்கள் கட்சியில் சேர உள்ளனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் தற்போது யாருடைய பெயரையும் கூற மாட்டேன். பா.ஜனதாவினர் எந்த விதமான நிபந்தனையும் இன்றி காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். எங்கள் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்று அவர்கள் கட்சியில் இணைகிறார்கள்.

பொதுமக்கள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. நாங்கள் முன்பு நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரியவந்தது. தற்போது நடத்திய கருத்து கணிப்பில் எங்கள் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

கர்நாடகத்தில் மாற்றம் தொடங்கியுள்ளது. நாங்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்வதால் இந்த மாற்றத்தை பார்த்து வருகிறோம். குஜராத் தேர்தல் முடிவடைந்ததும், கர்நாடகத்தில் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜனதா தயாரானது. தேர்தல் எப்போது நடத்தினாலும் அதை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது. தவறுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு வழங்காமல் தேர்தல் ஆணையம் உடனடியாக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். அதிகளவில் நடைபெற்று வரும் ஊழல்களை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story