கர்நாடகத்தில் 11-வது நாளாக ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார் ராகுல்காந்தி...!


கர்நாடகத்தில் 11-வது நாளாக ஒற்றுமை பாதயாத்திரையை  தொடங்கினார் ராகுல்காந்தி...!
x

35வது நாளான இன்று கர்நாடகாவின் சித்தாபுராவில் உள்ள சல்லகெரே நகரில் இருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி.

பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு வந்தது. அங்கு 19 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது. கர்நாடகத்தில் சாம்ராஜ்நகர் மாட்டம் குண்டலுபேட்டையில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு ஆகிய மாவட்டங்கள் வழியாக சித்ரதுர்கா மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வந்தடைந்தது. நேற்று முன்தினம் இரவு ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை சித்ரதுர்கா மாவட்டம் ஹர்திகோட்டே கிராமத்தில் நிறைவு செய்தார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தனது ஒட்டுமொத்தமாக 34-வது மற்றும் கர்நாடகத்தில் 10-வது நாள் பாதயாத்திரையை ஹர்திகோட்டே கிராமத்தில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கினார்.

14 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் நீடித்த நிலையில் சேனிகெரே கிராமத்தில் ராகுல் காந்தி காலை 11 மணிக்கு தனது காலை நேர பாதயாத்திரையை நிறைவு செய்தார். 5 மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு மாலை 4 மணிக்கு சேனிகெரே கிராமத்தில் இருந்து மீண்டும் பாதயாத்திரையை தொடங்கிய அவர், சித்ரதுர்கா சித்தாபுரா சாம்ராட்நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தார்.

அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த அவர், பின்னர் பாதயாத்திரையை தொடங்கி 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து சித்தாபுராவில் தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார். நேற்று அவர் 25 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டார். ராகுல் காந்தி சித்தாபுராவில் தங்கினார்.

இந்தநிலையில் இன்று அவர் தனது 11-வது நாள் பாதயாத்திரையை சித்தாபுராவில் இருந்து தொடங்கினார். பாதயாத்திரையின்போது, ராகுல் காந்தியை கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உடன் சென்றனர்

கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய யாத்திரை இதுவரை 905 கிலோமீட்டர் தூரம் பயணத்துள்ளது. இது மொத்தம் 12 மாநிலங்கள் வழியாகச் சென்று ஜம்மு காஷ்மீரில் முடிவடையும்.


Next Story