காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்; எப்படி வாக்களிக்க வேண்டும் என விளக்கம்
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி அக்கட்சியின் மத்திய தேர்தல் அமைப்பு தலைவர் விளக்கம் அளித்து உள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. நாளை பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி அக்கட்சியின் மத்திய தேர்தல் அமைப்பு தலைவர் மற்றும் முன்னாள் எம்.பி.யான மதுசூதன் மிஸ்திரி விளக்கம் அளித்து உள்ளார்.
அதில், வாக்கு பதிவு காகிதத்தில் 2 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்று இருக்கும் (மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர்). வாக்காளர்கள், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறார்களோ, அந்த வேட்பாளருக்கு முன்னால் உள்ள அதற்கான கட்டத்தில் டிக் மட்டும் செய்ய வேண்டும்.
அதற்கு பதிலாக, கட்டத்தில் வேறு எந்த அடையாளமோ அல்லது ஏதேனும் எண்களை எழுதுவதோ அந்த வாக்கை செல்லாத ஒன்றாக்கி விடும் என அவர் தெரிவித்து உள்ளார்.