சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி காங்கிரசார் ஊர்வலம்
சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நேற்று காங்கிரசாரும், பல்வேறு அமைப்பினரும் ஊர்வலம் நடத்தினர்.
மங்களூரு:
சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நேற்று காங்கிரசாரும், பல்வேறு அமைப்பினரும் ஊர்வலம் நடத்தினர்.
சூரத்கல் சுங்கச்சாவடி
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் - முக்கா பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். மேலும் சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினரும், காங்கிரஸ் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்த சுங்கச்சாவடியை அகற்றக்கூறி மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு இருப்பதாகவும், ஆனால் அந்த உத்தரவு இன்னும் அரசிதழில் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
போராட்டம் தொடரும்
இந்த நிலையில் அந்த சுங்கச்சாவடியை உடனடியாக அகற்றக்கோரி நேற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி ரமாநாத் ராய் தலைமையில் காங்கிரசாரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினரும் சேர்ந்து சூரத்கல் சுங்கச்சாவடியை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் தடம்பயல் சந்திப்பு பகுதியில் இருந்து சுங்கச்சாவடி நோக்கி ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் சுங்கச்சாவடி வரை சென்று முடிந்தது. ஊர்வலத்தின் முடிவில் முன்னாள் மந்திரி ரமாநாத் ராய் பேசினார். அப்போது அவர், 'இந்த சுங்கச்சாவடியை அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும். சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் எக்காரணம் கொண்டும் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம்' என்றார்.