'ஊழல்களின் களஞ்சியம், காங்கிரஸ்'
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தார்வார்:-
பா.ஜனதா அரசின் ஊழல்களை கண்டித்து 9-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் ஒன்றோ, இரண்டோ அல்ல. அக்கட்சி, ஊழல்களின் களஞ்சியம். ஊழல்கள் நிறைந்த கூடு தான் காங்கிரஸ். அந்த கட்சிக்கு முடிவு கட்டும் காலம் வந்துள்ளது. காங்கிரஸ் தலைவா்கள் போராட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் நடத்தும் முழு அடைப்புக்கோ அல்லது போராட்டத்திற்கோ மக்களின் ஆதரவு கிடைக்காது. தூய்மையானவர்கள் ஊழல் புகார்களை கூறினால் அதற்கு ஒரு மதிப்பு இருக்கும். ஆனால் தலையணை முதல் படுக்கை, காபி, பிஸ்கட் போன்றவற்றிலும் காங்கிரசார் ஊழல் செய்துள்ளனர். சித்தராமையா ஆட்சியில் ஊழல் மூலம் பணம் ஈட்ட மந்திரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனால் ஊழல்களால் நிறைந்த கட்சி தான் காங்கிரஸ். அதனால் பா.ஜனதா அரசுக்கு எதிரான காங்கிரசாரின் விளையாட்டு எடுபடாது. தேர்தலின்போது மக்கள் உரிய முடிவு எடுப்பார்கள்.
பெலகாவியில் சத்ரபதி சிவாஜி சிலையை காங்கிரசார் திறந்து வைத்துள்ளனர். அந்த சிலைக்காக எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தேசிய தலைவர்களின் பெயர்களில் அரசியல் செய்வது சரியல்ல. மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், இது ஒரு சாதாரண குண்டுவெடிப்பு சம்பவம் என்று கூறினார். இப்போது அதற்கு அவர் என்ன பதில் கூறுவார்?.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.