கர்நாடக மாநில தேர்தல் களத்தில் பா.ஜ.க.வின் 'இரட்டை என்ஜின்' பிரசாரத்துக்கு காங்கிரஸ் பதிலடி'கர்நாடகத்தில் தடம் புரண்ட என்ஜினை சரி செய்யவே தேர்தல் நடக்கிறது'


கர்நாடக மாநில தேர்தல் களத்தில் பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் பிரசாரத்துக்கு காங்கிரஸ் பதிலடிகர்நாடகத்தில் தடம் புரண்ட என்ஜினை சரி செய்யவே தேர்தல் நடக்கிறது
x

இரட்டை என்ஜின் அரசு அமைய வேண்டும் என்று கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் பா.ஜ.க. செய்து வரும் பிரசாரத்துக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

புதுடெல்லி,

இரட்டை என்ஜின் அரசு அமைய வேண்டும் என்று கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் பா.ஜ.க. செய்து வரும் பிரசாரத்துக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. 4 ஆண்டுகளாக கர்நாடகத்தில் தடம் புரண்ட என்ஜினை சரி செய்யவே தேர்தல் நடக்கிறது என்று கூறி உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் 10-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு பிரசாரம் களை கட்டி வருகிறது. பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைக்க போராடுகிறது. பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் வழக்கம்போல அங்கு 'இரட்டை என்ஜின்' அரசு பிரசாரத்தை முன்வைக்கின்றனர்.

அதாவது, மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி அரசு இருந்தால்தான், அது 'இரட்டை என்ஜின்'களாக செயல்பட்டு மாநிலத்தில் மக்கள் நல்ல பல பலன்களைப் பெற முடியும் என்று கூறி வருகின்றனர்.

இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக சாடி உள்ளது.

இதுபற்றி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

எதற்காக இரட்டை என்ஜின் வேண்டும்? கர்நாடக மாநில அரசின் வருமானத்தில் 94 சதவீதம் அதன் சொந்த வருமானத்தில் இருந்தும், மத்தியில் இருந்து மாநிலத்துக்கு வருகிற வரிகள் பங்காகவும் வருகிறது. மோடி ஆசீர்வாதத்தின் மூலம் அல்ல. நிதிக்கமிஷன் 'பார்முலா'வினால்தான்.

கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜ.க.வினால் கர்நாடக அரசு என்ஜின் தடம் புரண்டு விட்டது. அதை சரிசெய்து, முன்னோக்கித்தள்ளத்தான் மே 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இது சமூக நல்லிணக்கத்துடன் கூடிய வளர்ச்சி என்ஜினாக அமைய வேண்டும். அனல் காற்றில் இயங்கும் 40 சதவீதம் கமிஷனால் இயங்கும் என்ஜினாக அல்ல.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story