மத்திய அரசு துறைகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து விட்டது - காங்கிரஸ் குற்றச்சாட்டு


மத்திய அரசு துறைகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து விட்டது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

மத்திய அரசு துறைகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

புதுடெல்லி,

மத்திய பா.ஜ.க. அரசின் மீது காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

அந்த வகையில் நேற்று அவர் நாட்டில் மத்திய அரசு துறைகளில் காலியிடங்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து விட்டதாக்கூறி சாடி உள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் இந்தியில் வெளியிட்ட பதிவு வருமாறு:-

மோடியின் அரசின் முன்னுரிமை, ஒரு போதும் காலியிடங்களை நிரப்புவதில் இருந்தது இல்லை. 2014-ம் ஆண்டுடன் (பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த காலகட்டம்) ஒப்பிடுகையில் மத்திய அரசில் (பாதுகாப்புத்துறை சாராத) சிவிலியன் பணிகளில் காலியிடங்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. எல்லாவற்றையும் சேர்த்து, மத்திய அரசு துறைகளில் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளன.

மண்ணைத்தூவுகிறார்

உணர்வில்லாத மோடி அரசு, தலித்துகளுக்கு எதிரானது, பழங்குடியினருக்கு எதிரானது, பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது, பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு எதிரானது. எனவேதான் அது காலி பணியிடங்களை நிரப்பாமல் இருக்கிறது.

சில ஆயிரங்கள் காலியிடங்களை நிரப்புவதற்கான நியமன ஆணைகளை வழங்கி, மோடி கைதட்டல்களைப் பெறுவதற்காக இளைஞர்களின் கண்களில் மண்ணைத் தூவுகிறார் என்று அவர் கூறி உள்ளார்.

மேலும், மத்திய அரசு துறைகளில் அனுமதியளிக்கப்பட்ட இடங்களில், 2014-ம் ஆண்டு 11.57 சதவீதமாக இருந்த காலியிடங்கள், 2022-ம் ஆண்டு 24.3 சதவீதமாக இரு மடங்கு உயர்ந்து இருப்பதைக் காட்டுகிற வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.


Next Story