பாஜகவை பொறுத்தவரை நாடும் நாட்டு மக்களும் தான் முக்கியம்: பிரதமர் மோடி
பாஜகவிற்கு தேசமும் நாட்டு மக்களுமே முதன்மையானவர்கள் என்று மேகாலயா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் வரும் 27 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை ஒட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளன. தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி விட்ட நிலையில், இன்று பிரதமர் மோடி பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பிரதமர் மோடி கூறியதாவது:- மேகாலயாவில் விரைவில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. வளர்ந்த நாடுகளில் இருந்து பலரும் மேகாலயாவிற்கு வருகை தர உள்ளனர்.
மாநிலத்தின் பிம்பத்தை இது உயர்த்தும். 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்பதுதான் எங்களின் மதச்சார்பின்மை ஆகும். பாஜகவை பொறுத்தவரை தேசமும் நாட்டு மக்களும் தான் முதன்மையானவர்கள். காங்கிரஸ் கட்சிக்கு மேகாலாயாவை பற்றிய நினைப்பு தேர்தல் வந்தால் மட்டுமே வரும். காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் வடகிழக்கு மாநிலங்களை கொள்ளையடிக்கவே பயன்படுத்துகின்றன. தங்களின் ஏடிஎம் போல நடத்துகின்றன. மாநிலத்திலும் பாஜக ஆட்சி மத்தியிலும் பாஜக ஆட்சி என்ற முடிவுக்கு மேகாலயா மக்கள் வந்து விட்டனர்" என்றார்.