கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 150 தொகுதிகளில் வெற்றி பெறும்; டி.கே.சிவக்குமார் பேட்டி


கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 150 தொகுதிகளில் வெற்றி பெறும்; டி.கே.சிவக்குமார் பேட்டி
x

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பல்லாரி:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பல்லாரியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஊழல் தலைநகர்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி பாரத் ஜோடோ பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். அந்த பாதயாத்திரை தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒற்றுைமைப்படுத்துவது தான் அந்த பாதயாத்திரையின் நோக்கம் ஆகும். நாட்டில் வேலைவாய்ப்பு பெருகவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

அதனால் தான் வேலையற்ற இளைஞர்களை கணக்கெடுக்கும் பணியை நாங்கள் தொடங்கியுள்ளோம். அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. மக்களின் வருவாய் குறைந்துவிட்டது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பா.ஜனதா அரசின் மோசமான செயல்பாடுகளால் நாட்டின் ஊழல் தலைநகரமாக கர்நாடகம் மாறியுள்ளது.

150 தொகுதிகளில் வெற்றி

மடாதிபதிகளிடம் 30 சதவீதம், அரசின் திட்ட பணிகளை நிறைவேற்ற ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் பெறப்படுகிறது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த பணியும் நடப்பது இல்லை. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். ராகுல் காந்தியின் பாதயாத்திரை பல்லாரி வழியாகவும் செல்கிறது.

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை தைரியம் இருந்தால் தடுத்து நிறுத்துங்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சவால் விட்டுள்ளார். பசவராஜ் பொம்மையின் கடைசி நாட்கள் தொடங்கியுள்ளன. வருகிற சட்டசபை தோ்தலில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும். ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் தினமும் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். கர்நாடகத்தில் 21 நாட்கள் பாதயாத்திரை நடக்கிறது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story