"சிறுத்தைப்புலி திட்டம் எங்களுடையது"- ஆதார கடிதத்தை பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்
2009 இல் "பிராஜெக்ட் சீட்டா" திட்டத்தை காங்கிரஸ் அறிமுகப்படுத்திய கடிதத்தை ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் அழிந்து போன சிறுத்தைப்புலிகள் இனத்துக்கு புத்துயிரூட்டும் விதத்தில், நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைப்புலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவில் நேற்று விடுவித்தார்.
இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு முந்தைய அரசாங்கங்கள் ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று பிரதமர் மோடி விமர்சித்திருந்தார்.
இதை தொடர்ந்து இந்த திட்டத்துக்கு விதை போட்டது நாங்கள் தான் என காங்கிரஸ் கட்சி உரிமை கொண்டாடி இருந்தது. இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட டுவிட்டில், " 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி நான் கேப்டவுனுக்கு சென்றபோது, இந்த சிறுத்தைப்புலி திட்டம் போடப்பட்டது" என பதிவிட்டு இருந்தார்.
அதே போல் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "சிறுத்தைப்புலிகள் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது மன்மோகன் சிங் அரசு. அப்போதைய வனம் மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ், தென் ஆப்பிரிக்காவில் உள்ள சிறுத்தைப்புலிகள் மையத்துக்கு 2010 ஏப்ரலில் சென்றிருந்தார்" என தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் 2009 இல் "பிராஜெக்ட் சீட்டா" திட்டத்தை காங்கிரஸ் அறிமுகப்படுத்திய ஆதார கடிதத்தை ஜெய்ராம் ரமேஷ் இன்று பகிர்ந்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இது 2009 இல் ப்ராஜெக்ட் சீட்டாவை அறிமுகப்படுத்திய கடிதம். நமது பிரதமர் ஒரு பொய் கூறுகிறார். பாரத் ஜோடோ யாத்ரா மீதான எனது ஈடுபாட்டின் காரணமாக நேற்று இந்தக் கடிதத்தை பகிர முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த கடிதம் 2009 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் இருந்த போது, இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின் எம்.கே.ரஞ்சித்சிங்குக்கு எழுதியதாகும். அந்த கடிதத்தில் இந்தியாவில் சிறுத்தையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான வரைபடத்தை தயார் செய்ய ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.