பழுதான வாசிங் மிஷினை சரி செய்ய வராததால் துணிகளை கையால் துவைத்த பெண்ணுக்கு முதுகுவலி


பழுதான வாசிங் மிஷினை சரி செய்ய வராததால் துணிகளை கையால் துவைத்த பெண்ணுக்கு முதுகுவலி
x

பழுதான வாசிங் மிஷினை சரி செய்ய வராததால் துணிகளை கையால் துவைத்த பெண்ணுக்கு முதுகுவலி உண்டானது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் தொடர்ந்த வழக்கில் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க எலெகட்ரானிக் நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு

பழுதான வாசிங் மிஷினை சரி செய்ய வராததால் துணிகளை கையால் துவைத்த பெண்ணுக்கு முதுகுவலி உண்டானது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் தொடர்ந்த வழக்கில் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க எலெகட்ரானிக் நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வாசிங் மிஷின் பழுதானது

பெங்களூரு பலகெரேயை சேர்ந்த ஒருவர், ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள கடையில் கடந்த 2011-ம் ஆண்டு ஒரு எலெக்ட்ரானிக் நிறுவனத்திற்கு சொந்தமான வாசிங் மிஷினை விலைக்கு வாங்கி இருந்தார். அந்த நபர் வாசிங் மிஷின் வாங்கும் போது, விலையில் இருந்து அதிகப்படியாக ரூ.5 ஆயிரம் செலுத்தி, 2 ஆண்டுக்கு வாரண்டியை கூடுதலாக பெற்றிருந்தார். அதன்படி, அந்த வாசிங் மிஷின் ஏதேனும் பழுதானால் 2018-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டு எலெக்ட்ரானிக் நிறுவனமே சரி செய்து கொடுக்க வேண்டி இருந்தது.

இதற்கிடையில், வாரண்டி காலம் இருக்கும் போது அந்த நபருக்கு சொந்தமான வாசிங் மிஷின் பழுதானது. இதையடுத்து, வாசிங் மிஷினை சரி செய்து கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட எலெக்ட்ரானிக் நிறுவனத்திடம் அந்த நபர் புகார் அளித்திருந்தார். வாசிங் மிஷின் பழுது செய்யும் நபர் வந்து, அதனை புகைப்படம் மட்டுமே எடுத்து சென்றதாக தெரிகிறது. வாரண்டி காலம் இருந்தும், வாசிங் மிஷினை சரி செய்ய எலெக்ட்ரானிக் நிறுவனத்திடம் இருந்து யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

ரூ.20 ஆயிரம் வழங்க உத்தரவு

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் அந்த நபர் எலெகட்ரானிக் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். அதில், தனது வாசிங் மிஷினுக்கு வாரண்டி காலம் இருந்தும், அதனை சரி செய்ய நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. 2 ஆண்டுகள் வாரண்டி பெறுவதற்காக ரூ.5 ஆயிரம் கூடுதல் பணம் செலுத்தி உள்ளேன். வாசிங் மிஷின் பழுதானதால் எனது மனைவி துணிகளை தொடர்ந்து தனது கையால் துவைத்ததால் முதுகுவலி உண்டானது. இதற்கு சிகிச்சை பெற்றதற்காக ரூ.2 லட்சம் உள்பட ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த நபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதன்படி, நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்றது. ஆனால் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க எலெக்ட்ரானிக் நிறுவனம் மறுத்து விட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வாரண்டி இருந்தும் வாசிங் மிஷினின் பழுதை சரி செய்ய செல்லாததால், அந்த நபருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கும்படி எலெக்ட்ரானிக் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் ரூ.3 லட்சம் இழப்பீடு கேட்ட அந்த நபர் ஏமாற்றம் அடைந்துள்ளார்.


Next Story