சிக்கமகளூருவில் தொடர் கனமழை; ஹேமாவதி, பத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
சிக்கமகளூருவில் தொடர் கனமழை காரணமாக ஹேமாவதி, பத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு;
தொடர் கனமழை
கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஜூன்) தென்மேற்கு பருவமழை தொடங்கப்பட்டாலும் இதுவரை பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தற்போது மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது.
அந்தப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது. மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக சிக்கமகளூருவில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் சிக்கமகளூருவில் உள்ள ஒன்னம்மன், கல்லத்தி, ஹெப்பே, மாணிக்கத்தாரா, அலேகான் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அங்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
வெள்ளப்பெருக்கு
மேலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளான ஹேமாவதி, பத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறுகளின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக ஹேமாவதி, பத்ரா ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.பத்ரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கலசாவில் இருந்து ஒரநாடு அன்னப்பூர்னேஸ்வரி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் ஹெப்பாலே பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த தரைப்பாலத்தில் நின்றப்படி ஏராளமானோர் செல்பி எடுத்து வருகிறார்கள். இந்த தரைப்பாலம் மூழ்கினால் அன்னப்பூர்னேஸ்வரி அம்மன் கோவிலுக்கு செல்ல குதிரேமுக்கா வழியாக 7 கிலோ மீட்டர் சுற்றி தான் செல்ல வேண்டி வரும்.
இதேபோல், துங்கா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிருங்கேரி மடத்தையொட்டி ஓடும் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இன்னும் 5 நாட்களுக்கு மாவட்டத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் மீட்பு குழுவினர் மற்றும் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்ட ஆப்தமித்ரா குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.