நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை; கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை; கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மைசூரு;


மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை அருகே கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. இதேபோல், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது.

கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. அதன்பிறகு மழை பெய்யாததால், அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது. இந்த நிலையில் தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று காலை நிலவரப்படி 124.33 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 27,148 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 28,290 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,283.58 அடி தண்ணீர் உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 15,177 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 14,125 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 42,415 கனஅடி தண்ணீர் வெளியேறி அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது.நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 33 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story