மறைமுகமாக இஸ்லாமிய சமூகத்தை சாடிய பாஜக எம்பி - வெடித்த சர்ச்சை
சிறுபான்மையினரை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் என பாஜக எம்பி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
சிறுபான்மையினரை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் என பாஜக எம்பி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியை சேர்ந்த மனீஷ் என்ற நபர் கடந்த வாரம் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அவரது, கொலையில் தொடர்புடையதாக 3 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மனீஷ் கொலையை கண்டித்து டெல்லியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய டெல்லியின் பாஜக எம்பி பர்வேஷ் வர்மா, குறிப்பிட்ட சமூகத்தினரை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றார்.
எங்கெல்லாம் குறிப்பிட்ட மக்களை பார்க்கிறீர்களோ அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்றதுடன், அவர்களிடம் வியாபார ரீதியில் எந்த பொருட்களையும் வாங்க கூடாது என்றார். மறைமுகமாக இஸ்லாமிய சமூகத்தை சாடியபடி பேசிய எம்பியின் கருத்துக்கள் சர்ச்சையானது.
இதற்கு விளக்கம் அளித்த அவர், குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை கூறவில்லை என்றும், படுகொலையில் தொடர்புடையவர்களின் குடும்பத்தினரை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று பேசியதாக தெரிவித்துள்ளார்.