இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 95 ஆக சரிவு: உயிரிழப்பு இல்லை
இந்தியாவில் நேற்று தொடர்ந்து 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது.
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று தொடர்ந்து 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது. நேற்று முன்தினம் 120 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 95 ஆக சரிவடைந்தது. இதனால் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 85 ஆயிரத்து 132 ஆக அதிகரித்தது.
நேற்று முன்தினம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 262 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கொரோனா தொற்றில் இருந்து நேற்று ஒரு நாளில் 90 பேர் மீண்டனர். மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 450 பேர் இதுவரை இந்தத் தொற்றில் இருந்து மீட்டிருக்கிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் நாட்டில் உயிரிழப்பு ஏதும் இல்லை. கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 761 ஆக தொடர்கிறது.
கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 5 அதிகரித்தது. நாடெங்கும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 1,921 பேர் கொரோனா மீட்பு சிகிச்சையில் உள்ளனர்.