வசுந்தரா ராஜே அரசில் ஊழல்; விசாரணை கோரி உண்ணாவிரத போராட்டம் தொடங்கிய சச்சின் பைலட்


வசுந்தரா ராஜே அரசில் ஊழல்; விசாரணை கோரி உண்ணாவிரத போராட்டம் தொடங்கிய சச்சின் பைலட்
x

பா.ஜ.க. முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அரசின் ஊழல் பற்றி விசாரிக்க கோரி காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளார்.


ஜெய்ப்பூர்,


ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது, பா.ஜ.க.வை சேர்ந்த முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான அரசில் நடந்த ஊழல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரசை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் வலியுறுத்தினார்.

இதற்கு கெலாட் அரசு செவிசாய்க்காத நிலையில், விசாரணையை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என பைலட் திட்டமிட்டு உள்ளார். இதன்படி, ஜெய்ப்பூர் நகரில் வைக்கப்பட்டு இருந்த சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதிபா புலேவின் உருவ படம் மற்றும் சிலைக்கு முதலில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர், ஜெய்ப்பூரின் ஷாகீத் சமர்க் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றார். அவர், பா.ஜ.க. முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அரசின் ஊழல் பற்றி விசாரணை நடத்த வலியுறுத்தி நாள் முழுமைக்கும் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டு உள்ளார்.


Next Story