மேம்பாலத்தில் இருந்து பைக் விழுந்ததில் தம்பதி உயிரிழப்பு - மகள் படுகாயம்
துர்க்-ராய்ப்பூர் சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் மேம்பாலத்தில் இருந்து பைக் விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர்.
துர்க்,
சத்தீஸ்கரில் உள்ள துர்க்-ராய்ப்பூர் சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் மேம்பாலத்தில் இருந்து பைக் விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர். அவர்களது மகள் பலத்த காயமடைந்தார்.
துர்க்-ராய்ப்பூர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பாதை முன்னதாகவே கட்டி முடிக்கப்பட்டு வாகனப் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. மற்றொரு பாதையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் எந்தத் தடையோ அல்லது அடையாளமோ அங்கு வைக்கப்படவில்லை.
ராய்ப்பூரைச் சேரந்தவர்கள் அஜூராம் தேவாங்கன் (46), அவரது மனைவி நிர்மலா (42) மற்றும் அவர்களது 12 வயது மகள் அன்னு. இவர்கள் மூவரும் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் துர்க் மாவட்டத்தின் கும்ஹாரி நகரில், ஜஞ்சகிரி கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கட்டுமானப்பணி நடைபெற்று வரும் மேம்பாலத்தின் முடிவிலிருந்து இருந்து சுமார் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்தனர். இந்த விபத்தில் தேவாங்கன், நிர்மலா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், அவர்களது மகள் பலத்த காயம் அடைந்தார். அவர் உடனடியாக அருகிலுள்ள கும்ஹாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து ராய்ப்பூர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு மாற்றப்பட்டார்.
இந்த விபத்தையடுத்து போலீசார் அந்த பாதையில் ஒரு தடையை அமைத்தனர். அதே பாதையில் வேகமாக வந்த கார் ஒன்று மேம்பாலத்தின் முடிவிலிருந்து கீழே விழுந்தது. இருப்பினும், காரை ஓட்டி வந்த நபர் காயமின்றி உயிர் தப்பினார்.