சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு புதிய வகை கொரோனா அறிகுறி...!


சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு புதிய வகை கொரோனா அறிகுறி...!
x
தினத்தந்தி 26 Dec 2022 8:00 AM GMT (Updated: 26 Dec 2022 8:26 AM GMT)

சீனாவில் இருந்து ஆக்ராவிற்கு வந்த நபருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா இந்த ஆண்டு (2022) சற்று ஓய்ந்து இருந்தது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.சீனாவின் உகான் நகரில்தான் முதலில் கொரோனா தோன்றியது. தற்போது சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா (பி.எப்.7) பரவல் வேகம் எடுக்கத்தொடங்கி விட்டது. இந்தியாவிலும் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் மாநில அரசுகளை அறிவுறுத்தி இருந்தது.

தொற்று பரவல் அதிகம் இருக்கும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களிலும் நேற்று முன்தினத்தில் இருந்து பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த23-ம் தேதி சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவின் ஷாகஞ்ச் பகுதியை சேர்ந்த 40 வயதான நபர், சீனாவில் தங்கி பணிபுரிந்த நிலையில், விடுமுறையை ஒட்டி வீடு திரும்பியுள்ளார்.

கடந்த 23-ம் தேதி அன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அறிகுறி ஏதும் இல்லாவிட்டாலும் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாற்றம் பெற்ற கொரோனாவா என்பதை அறிந்துகொள்வதற்காக மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்காக அவரது மாதிரிகள் லக்னோவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆக்ராவில் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு பதிவாகாமல் இருந்த நிலையில் சீனாவில் இருந்து ஆக்ராவிற்கு வந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறியும் பணிகள் நடைபெறுகிறது. ஆக்ராவில் உள்ள ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி தாஜ்மஹாலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கொரோனா பரவுவதைத் தடுக்க சுகாதாரத் துறை ஏற்கனவே சோதனைகளைத் தொடங்கியுள்ளது. விழுப்புணர்வு இருப்பதால், தாஜ்மஹாலை பார்வையிட வரும் அனைவருக்கும் பரிசோதனை செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் அதிகாரி (ஆக்ரா) அனில் சத்சங்கி கூறியுள்ளார்.

இந்தியாவில் பி.எப்-7 வைரஸ் நுழைந்தாலும் அதன் வீரியம் மிக விரைவில் சரிவை சந்திக்கும். தற்போதைய ஆய்வின்படி இந்தியர்களிடம் புதிய வகை கொரோனா பரவினாலும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே அதன் தாக்கம் இருக்கும். 2 நாட்களில் அதன் அறிகுறிகளும், தாக்கமும் நீங்கி விடும். என்றாலும் ஒவ்வொரு இந்தியரும் முன்எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. முக கவசம் அணிந்திருப்பதால் எந்த தாக்கத்தில் இருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும் என சிஎஸ் ஐ.ஆர் தலைவர் வினய் நந்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story