மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு வலு சேர்க்க பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேற வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு


மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு வலு சேர்க்க பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேற வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு
x

மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு வலு சேர்க்க பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

மாநிலக்குழு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநிலக்குழு கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார்.

கட்சியின் தேசிய செயலாளர் அஜீஸ்பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதில் மாநில நிர்வாகிகள் நாரா.கலைநாதன், அபிசேகம், ராமமூர்த்தி, தினேஷ்பொன்னையா, சேதுசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அனைத்துக்கட்சி கூட்டம்

புதுவை மாநில வளர்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறி மாநில அந்தஸ்து பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாநில அந்தஸ்துக்கான நடவடிக்கைகளுக்கு வலு சேர்த்திடவும், துரிதப்படுத்திடவும் உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கவேண்டும்.

மின்துறை தனியார் மயம் சம்பந்தமாக பெறப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி உறைகளை திறக்க ஐகோர்ட்டு தடை விதித்துள்ள சூழலில் தொடர்ந்து அரசு தனியார் மய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதை மாநிலக்குழு கண்டிக்கிறது. தனியார்மய நடவடிக்கை தொடர்ந்தால் மதச்சார்பற்ற கட்சிகள் சார்பாக மாபெரும் போராட்டங்களை சந்திக்கநேரிடும். மின்துறை தனியார் மயத்தை முழுமையாக கைவிட வேண்டும்.

கூட்டுறவு தேர்தல்

புதுவை அரசு சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு குறித்த காலத்துக்குள் செலுத்தும் என்ற உத்தரவாதத்தை வழங்கி மாணவர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

கூட்டுறவு நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்திட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story