மோடியின் கொள்கைகள் இந்தியாவை உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாற்றி உள்ளன - சி.ஆர்.கேசவன்


மோடியின் கொள்கைகள் இந்தியாவை உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாற்றி உள்ளன - சி.ஆர்.கேசவன்
x

ஏ.கே.அந்தோணியின் மகனை தொடர்ந்து ராஜாஜியின் கொள்ளுப்பேரன், தன்னை பா.ஜனதாவில் இணைத்துக் கொண்டார்.

புதுடெல்லி,

2 நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பா.ஜனதாவில் இணைந்தார். அதைப்போல ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டியும் அக்கட்சியில் சேர்ந்தார். இவரும் காங்கிரஸ் கட்சிக்காரர்தான்.

இந்த நிலையில் அதே காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த சி.ஆர்.கேசவன், டெல்லியில் நேற்று பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.ஆர்.கேசவன் காங்கிரசில் ஊடகக்குழு உறுப்பினராக இருந்தார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு சி.ஆர்.கேசவன் வேறு கட்சியில் சேருவார் என கூறப்பட்டது. அதன்படி அவர் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி வி.கே.சிங், பா.ஜனதா தலைமை செய்தித்தொடர்பாளர் அனில் பலூனி ஆகியோரது முன்னிலையில் பா.ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பா.ஜ.க.வில் இணைந்தது பற்றி சி.ஆர்.கேசவன் கூறியதாவது:- நமது பிரதமர் தமிழ்நாட்டில் இருக்கும் இந்த நாளில் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியில் என்னை இணைத்துக்கொண்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை மையமாகக் கொண்ட மோடியின் கொள்கைகள், ஊழலற்ற ஆட்சி மற்றும் சீர்திருத்தம், வளர்ச்சி ஆகியவை பலவீன பொருளாதாரத்தில் இருந்து இந்தியாவை உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாற்றி உள்ளன. எனது குடும்பத்தில் உள்ளவர்கள்கூட பிரதமரின் வீடு திட்டத்தில் வீடு பெற்றதை நான் அறிவேன். மத்திய அரசின் பலன்கள் முன்பு புரோக்கர்களின் வழியாக வந்தது. தற்போது அது நேரடி பரிமாற்றமாக ஆகிவிட்டது. காங்கிரசில் 20 ஆண்டுகளுக்கு மேல் உழைத்த நான் எந்த மதிப்பையும் அங்கு உணரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story