கொலையான ஜெயின் துறவியின் உடல் தகனம்


கொலையான ஜெயின் துறவியின் உடல் தகனம்
x

பெலகாவியில் கொலையான ஜெயின் துறவியின் உடல் ஜெயின் சமூக முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) அமைதி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

ஜெயின் துறவி கொலை

பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா ஹிரேகோடி கிராமத்தில் நந்திபர்வத என்ற ஜெயின் மடம் உள்ளது. இந்த மடத்தின் துறவியாக ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஆச்சார்யா ஸ்ரீ 108-வது காமகுமார நந்தி மகாராஜா என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மடத்தில் இருந்து மாயமானார். இதுகுறித்து மடத்தின் நிர்வாகிகள் சிக்கோடி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மடத்தை சேர்ந்த 2 பேரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தான் ஜெயின் துறவியை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அதில் ஒருவர் துறவியிடம் ரூ.6 லட்சம் கடன் பெற்று உள்ளார். அந்த பணத்தை துறவி திருப்பி கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க விரும்பாத அவர், தனது கூட்டாளியுடன் சேர்ந்து காமகுமார நந்தி மகாராஜா துறவி மீது மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்துள்ளார்.

உடல் தகனம்

பின்னர், அவரது உடலை தலை, கைகள், கால்கள் என கூறு போட்டு அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் வீசி உள்ளனர். இதையடுத்து போலீசார் சுமார் 11 மணி நேரம் தீவிரமாக தேடிய நிலையில், ஜெயின் துறவின் உடல் பாகங்கள் கிடைத்தன. மொத்தம் 9 பாகங்களாக உடலை அவர்கள் வெட்டியது தெரியவந்தது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மடம் மற்றும் உடல் உறுப்புகள் கிடைத்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜெயின் துறவி ஆச்சார்யா ஸ்ரீ 108-வது காமகுமார நந்தி மகாராஜாவின் உடலுக்கு நேற்று ஜெயின் சமூக முறைப்படி இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

இதையடுத்து அவரது உடல் மடத்தின் அருகே உள்ள நிலத்தில் தகனம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

போராட்டம்

இந்த நிலையில் ஜெயின் துறவியின் கொலையை கண்டித்து ஜெயின் மடம் சார்பில் இன்று (திங்கட்கிழமை) அமைதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி அளவில் ஆர்.டி.கல்லூரி முதல் சிக்கோடி வரை அமைதி ஊர்வலம் நடைபெற உள்ளது.

இதற்கிடையே ஜெயின் துறவி படுகொலையை கண்டித்து சித்தசேனா மகாராஜா என்ற ஜெயின் துறவி தலைமையில் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதா கட்டிடம் முன்பு போராட்டம் நடந்தது. இதில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கலபுரகியிலும்...

போராட்டத்தின்போது சித்தசேனா மகாராஜா கூறுகையில், இந்த போராட்டம் சாதி, மதம், போன்றவற்றுக்காக நடைபெறவில்லை. அமைதியை உறுதி செய்யும் வகையில் நடக்கிறது. எனவே இதற்கு போலீசார் பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

இதேபோல், ஜெயின் துறவி கொலையை கண்டித்து கலபுரகி டவுன் பகுதியில் சர்தார் வல்லபாய் படேல் சர்க்கிள் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை ஜெயின் சமூகத்தினர் சார்பில் அமைதி போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள், காமகுமார நந்தி மகாராஜாவை கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறத்தினர்.


Next Story