காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுவை நிராகரிக்க கூறி முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து நெருக்கடி; டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுவை நிராகரிக்க கூறி முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு:
சட்டசபை தேர்தல்
வருகிற 10-ந்தேதி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் கர்நாடகத்தில் அரசியல் களம் நாள்தோறும் பரபரப்பாக உள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி கடந்த 13-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி கடந்த 20-ந்தேதியுடன் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.
இதில், கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரும், கனகபுரா தொகுதி வேட்பாளருமான டி.கே.சிவக்குமாரின் வேட்பு மனுவில் இணைத்துள்ள சொத்து விவரமும், வருமானவரி கணக்கில் தாக்கல் செய்த சொத்து விவரத்திற்கும் வித்தியாசம் இருப்பதாகவும் பா.ஜனதாவில் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.
பேட்டி
இதனால் தேர்தல் அதிகாரிகளும், வருமானவரித் துறையினரும் சொத்து விவரத்தின் 2 பட்டியல்களையும் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் டி.கே.சிவக்குமாரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
40 சதவீத கமிஷன் பெறவில்லை
காங்கிரஸ் கட்சி தங்கள் வேட்பாளர்களுக்கு தேர்தலில் சீட் வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றிருப்பதாக மத்திய மந்திரி ஷோபா குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். ரூ.2 லட்சம் பெற்றதற்காக காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நான் 40 சதவீத கமிஷன் பெறவில்லை. பா.ஜனதா கட்சி 40 சதவீதம் கமிஷன் பெற்றதற்கு, மாடால் விருபாக்ஷப்பா எம்.எல். ஏ.வே சாட்சி.
பா.ஜனதா கட்சியை சேர்ந்த யத்னால், நேரு ஒலேகார், எச்.விஸ்வநாத் உள்ளிட்ட தலைவர்களே அக்கட்சியினரும், தலைவர்களும் கமிஷன் பெறுவதாக கூறி இருக்கின்றனர். வேட்பு மனுக்காக ரூ.5 ஆயிரமும், கட்சியின் புதிய கட்டிடத்திற்காக ரூ.2 லட்சமும் வாங்கியது உண்மை தான். பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்களிடம் பணம் கொடுக்கும்படி அழுத்தம் கொடுக்கவில்லையே. சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் 40 சதவீத கமிஷன் விவகாரம், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்களை முன்வைத்தே காங்கிரஸ் பிரசாரம் செய்யும்.
பா.ஜனதா அணைகட்டு உடைந்து...
பா.ஜனதாவின் அணைகட்டு உடைந்து வெளியேறும் தண்ணீர் காங்கிரஸ் கட்சியின் கடலில் வந்து சேருவதாக கூறினேன். இதற்கு மற்றொரு சாட்சி தான் சித்தாபுரா தொதியில் 3 முறை பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்த விஸ்வநாத் பட்டீல், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். இதுபோல், நிறைய பா.ஜனதா தலைவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேருவார்கள்.
பூத் மட்டத்தில் இருந்தும், பிற கட்சிகளில் இருந்தும் வருபவர்களை காங்கிரசில் சேர்த்து கொள்ள, கட்சியின் பிரமுகர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளேன். மாநிலத்தில் மாற்றத்திற்கான காலம் தொடங்கி விட்டது. அதனால் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி காங்கிரசுடன் அனைத்து தலைவர்களும் கைகோர்த்து வருகின்றனர்.
முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து...
என்னுடைய வேட்பு மனுவை தள்ளுபடி செய்வதற்கான முயற்சியில் பா.ஜனதாவினர் ஈடுபட்டனர். எனது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. இதுபோல், மாநிலம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய முதல்-மந்திரி அலுவலகத்தை தவறாக பயன்படுத்தி உள்ளனர். முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்தே தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளன.
முதல்-மந்திரி அலுவலகத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். எனவே முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து சென்ற தொலைபேசி அழைப்புகள் சம்பந்தப்பட்ட பட்டியலை பெற்று தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்.
தவறுகள் இருந்துள்ளது
பெலகாவி மாவட்டம் சவதத்தி எல்லம்மா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் வேட்பு மனுவில் சில தவறுகள் இருந்துள்ளது. அந்த தவறுகளை திருத்துவதற்காக முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து தேர்தல் அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும்.
பா.ஜனதா வேட்பாளர்களின் வேட்பு மனுவில் தவறு இருந்தால், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும். வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்ட எனது பிரமாண பத்திரத்தை ஆயிரக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.