ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணி அரசு தப்புமா? நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
ஜார்க்கண்டில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஐதராபாத்தில் இருந்து ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் ராஞ்சிக்கு புறப்பட்டுள்ளனர்.
ராஞ்சி,
நிலம் தொடர்பான முறைகேடான பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த மாதம் 31 ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி பதவியை ராஜினமா செய்தார். ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்வராம சம்பாய் சோரன் பதவியேற்றார்.
சம்பாய் சோரன் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டு இருந்தார். இதன்படி, ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால், ஐதரபாத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று ராஞ்சி புறப்பட்டு சென்றனர். ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 80 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் ஆதரவு அவசியம்.