டென்மார்க் நாட்டு அரச குடும்பம் இந்தியாவுக்கு வருகை


டென்மார்க் நாட்டு அரச குடும்பம் இந்தியாவுக்கு வருகை
x

டென்மார்க் நாட்டின் இளவரசர் மற்றும் இளவரசி சிறப்பு விமானத்தில் இன்று இந்தியாவுக்கு வந்தடைந்து உள்ளனர்.



கோபன்ஹேகன்,


டென்மார்க் நாட்டின் இளவரசர் பிரடெரிக் ஆந்திரே ஹென்ரிக் கிறிஸ்டியன் மற்றும் இளவரசி மேரி எலிசபெத் ஆகியோர் இன்று முதல் மார்ச் 2-ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இதற்காக அவர்கள் இன்று காலை புதுடெல்லி வந்தடைந்தனர். இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், டென்மார்க் நாட்டு அரச குடும்பம் வருகை உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அவர்களது வருகை இந்தியா மற்றும் டென்மார்க் ஆகிய இரு நாடுகளின் நெருங்கிய மற்றும் நட்புறவை வலுப்படுத்துவதுடன், மேம்படவும் செய்யும் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதுபற்றி இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் பிரெட்டி ஸ்வானே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறும்போது, டென்மார்க்கின் இளவரசர், இளவரசி மற்றும் நிறுவனங்கள் வரும் மார்ச் 2-ந்தேதி வரை 5 நாட்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் பயணம் செய்கின்றனர்.

நான் முன்பே கூறியதுபோன்று, டேனிஷ் நாட்டு நிறுவனங்கள் அல்லது தனியார் துறை முதலீட்டுக்கு ஏற்ற இடம் தமிழகம். இதுபோக நிறைய டேனிஷ் நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. குறிப்பிடும்படியாக ஆற்றல் பிரிவில் நிறைய செயல்பட்டு வருகின்றன.

காற்றாலைக்கான சர்வதேச அளவிலான வினியோக பிரிவிலும் ஈடுபட்டு உள்ளன. காற்றாலைக்கான இயந்திரங்கள், தட்டுகள், கேபிள்கள் மற்றும் அதற்கு எவையெல்லாம் தேவையோ அவை அனைத்தும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.

அதனால், பசுமை சக்தி, ஆற்றல் பரிமாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக எங்களது நாட்டு அரசர்கள், மந்திரிகள் மற்றும் எங்களுடைய நிறுவனங்களும் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

டென்மார்க் நாட்டு அரச குடும்பத்தில் இருந்து அரச தம்பதி வருவது 2 தசாப்தங்களில் இது முதன்முறை ஆகும். கடந்த 2003-ம் ஆண்டில் கடைசியாக டென்மார்க் இளவரசர் வந்து சென்றார். அதற்கு முன் 1963-ம் ஆண்டு டென்மார்க் அரசி 2-ம் மார்கரெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் அழைப்பின் பேரில் அரச குடும்பத்தினர் வருகை தருகின்றனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவித்து உள்ளது.

இந்த பயணத்தில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்காரை, டென்மார்க் இளவரசர் ஹென்ரிக் கிறிஸ்டியன் நேரில் சந்தித்து பேசுகிறார். அதன்பின்னர், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் அவர் நேரில் சந்தித்து பேசுகிறார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

அரச குடும்ப தம்பதிகளின் பயணத்தின்போது, அவர்கள் ஆக்ரா மற்றும் சென்னைக்கு வருகை தருகின்றனர். இதன்பின்னர், அவர்கள் மார்ச் 2-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த நாட்டுக்கு செல்கின்றனர்.

அவர்களுடன் டென்மார்க்கின் வெளிவிவகார மந்திரி லார்ஸ் லூக் ரஸ்முஸ்சென், சுற்றுச்சூழல் துறை மந்திரி மேக்னஸ் ஹியூனிக் மற்றும் பருவநிலை, ஆற்றல் மற்றும் பயன்பாடுகள் துறை மந்திரி, மூத்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட வர்த்தக குழுவும் அரச தம்பதியுடன் இந்தியாவிற்கு வருகை தந்து உள்ளனர்.


Next Story