டெஸ்ட் போட்டிகளிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு...! ஜெர்சியை பரிசளித்த பாகிஸ்தான் கேப்டன்...!


டெஸ்ட் போட்டிகளிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு...! ஜெர்சியை பரிசளித்த பாகிஸ்தான் கேப்டன்...!
x
தினத்தந்தி 6 Jan 2024 7:13 AM GMT (Updated: 6 Jan 2024 7:13 AM GMT)

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றியது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. நடந்த முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது .

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 77.1 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 14 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, வெறும் 115 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து 130 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, சிட்னியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியுடன் அவர் ஓய்வு பெற்றார் . முதல் இன்னிங்சில் 34 ரன்களை சேர்த்த டேவிட் வார்னர், இரண்டாவது இன்னிங்சில் 57 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், இந்த போட்டி முடிந்த உடன் பாகிஸ்தான் அணி வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத், டேவிட் வார்னருக்கு பரிசாக அளித்தார்.


Next Story