தீண்டாமை, சமூக வேற்றுமைக்கு எதிராக கடுமையாக போராடியவர் தயானந்த சரஸ்வதி; பிரதமர் மோடி
தீண்டாமை, சமூக வேற்றுமைக்கு எதிராக கடுமையாக போராடியவர் மகரிஷி தயானந்த சரஸ்வதி என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்ட மற்றும் முக்கிய நபர்களை கொண்டாடும் முனைப்பில் அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. அதிலும் சமூகத்திற்கு அவர்கள் பங்காற்றியதற்கு கைமாறாக, சமூகம் எதுவும் செய்யாமல் விடப்பட்டவர்களை கொண்டாடி வருகிறது.
200 ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தில் நிலவிய சமத்துவமற்ற நிலையை எதிர்கொள்ளும் சமூக சீர்திருத்த பணியை மேற்கொள்வதற்காக ஆர்ய சமாஜம் என்ற அமைப்பை தொடங்கியவர் மகரிஷி தயானந்த சரஸ்வதி. 1824-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி பிறந்த இவர் ஏற்படுத்திய அமைப்பு, நாட்டில் கலாசார மற்றும் சமூக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. சமூக சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றை வலியுறுத்தியது.
அவரது 200-வது பிறந்த நாளை முன்னிட்டு, அதனை நினைவுகூரும் வகையில் ஓராண்டுக்கு அதனை கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கத்தில் இன்று காலை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜைகள் மற்றும் யாகங்களை மேற்கொண்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். இதனை முன்னிட்டு மத்திய மந்திரி ஜி.கே. ரெட்டி மற்றும் மத்திய கலாசார துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் மத்திய மந்திரி மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்பின் நிகழ்ச்சியில், கூட்டத்தினர் முன் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசும்போது, உலகை வளர்ச்சியை நோக்கி செலுத்துபவர்களில் ஒருவராக நாம் இருப்போம் என மகரிஷி தயானந்தஜி நம்பினார். அவர் காட்டிய வழி கோடிக்கணக்கான மக்களிடம் நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
இந்திய மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கான குரலாக அவர் விளங்கியபோது, சமூக வேற்றுமை, தீண்டாமை மற்றும் அதுபோன்ற பல சீர்கேடுகளுக்கு எதிராக கடுமையான பிரசாரம் தொடங்கி நடத்தினார்.
நாட்டின் இன்றைய மகள்கள் ரபேல் போர் விமானங்களில் கூட பறக்கின்றனர். ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்களை கைதூக்கி விடுவதே தலையாய முக்கியத்துவம் வாய்ந்த விசயம் ஆகும் என அவர் பேசியுள்ளார்.