"தலையை எடுக்க வேண்டுமா...! " -லீனா மணிமேகலைக்கு சாமியார் கொலை மிரட்டல்


தலையை எடுக்க வேண்டுமா...!  -லீனா மணிமேகலைக்கு சாமியார் கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 6 July 2022 8:28 AM GMT (Updated: 6 July 2022 8:29 AM GMT)

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஹனுமான் கோவிலில் சாமியார் ராஜூ தாஸ் மகாந்த் என்பவர் லீனா மணிமேகலையை மிரட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி

கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை, ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். மாடத்தி, செங்கடல் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். கனடாவில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தில் முதுநிலை கவின்கலை படித்துவரும் அவர், கனடாவின் தாளங்கள் என்ற திட்டத்தின்கீழ், காளி குறித்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் காளி வேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இந்துக்கள் புனிதமாக வணங்கும் காளி தெய்வத்தை இழிவுப்படுத்துவதாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. "அரெஸ்ட் லீனா மணிமேகலை" என்ற ஹேஷ்டாக் வைரலாக பரவியது.

இதைத்தொடர்ந்து வினி ஜிண்டால் என்ற வழக்கறிஞர் டெல்லி போலீசில் லீனா மீது புகார் கொடுத்துள்ளார். இதேப்போல நெல்லை உள்ளிட்ட நாடு முழுவதும் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லீனாவிற்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.லீனாவிற்கு எதிராக டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த போஸ்டர் குறித்து டுவிட்டரில் விளக்கமளித்துள்ள லீனா மணிமேகலை, ஒரு மாலைப்பொழுதில் கனடாவின் டொரோண்டோ நகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் காளி ஆவணப்படம். படத்தைப்பார்த்தா "arrest leena manimekalai" hashtag போடாம "love you leena manimekalai" hashtag போடுவாங்க. "எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்'' என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் லீனாவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் நடிகையும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான குஷ்பு. அவர் கூறுகையில், ‛‛படைப்பாற்றலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே படைப்பாளிகள் கடவுளை இப்படி சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி, வன்மையான கண்டனங்கள்'' என கூறி உள்ளார்.

இந்நிலையில்உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஹனுமான் கோவிலில் சாமியார் ராஜூ தாஸ் மகாந்த் என்பவர் லீனா மணிமேகலையை மிரட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:

சமீபத்திய நிகழ்வுகளை பாருங்கள். நுபுர் சர்மா சரியான விஷயங்களை கூறியபோதும் அவரது கருத்து என்பது இந்தியா, உலகம் முழுவதும் நெருப்பை கிளப்பி உள்ளது. ஆனால் நீங்கள் சனாதன தர்மத்தை அவமதிக்க விரும்புகிறீர்களா?.

உங்கள் தலையை உடலிலிருந்து பிரிக்க விரும்புகிறீர்களா?. இதுதான் உங்களுக்கு வேண்டும்?. இந்த விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு படத்துக்கு தடை விதிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் கடினமான சூழல் ஏற்படுத்தப்படும்'' என கூறியுள்ளார்.


Next Story