நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல்; என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு


நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல்; என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு
x

பெலகாவி சிறையில் இருந்தபடி மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பெங்களூரு:-

விசாரணை கைதிகள்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் ஹிண்டல்கா சிறை உள்ளது. மாநிலத்தில் உள்ள முக்கிய சிறைகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியின் மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. அதில் மத்திய மந்திரி நிதின் கட்காரியை கொலை செய்ய உள்ளதாகவும், கொலை செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.10 கோடி வழங்குமாறும் கூறப்பட்டது. மேலும் தான் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகீமின் கூட்டாளி எனவும் கூறினார். இதுகுறித்து உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அந்த அழைப்பு பெலகாவியில் உள்ள சிறையில் இருந்து வந்தது தெரிந்தது.

என்.ஐ.ஏ. வழக்கு

மேலும் விசாரணையில் ஹிண்டல்கா சிறையில் உள்ள கொலை கைதி, ஜெயேஷ் பூஜாரி தான் நிதின் கட்காரி அலுவலகத்திற்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்தது தெரிந்தது. இதற்கு முன்பு அவர் கடந்த ஜனவரி 14-ந் தேதியும் இதேபோல் மந்திரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தது தெரிந்தது.

மத்திய மந்திரி பாதுகாப்பு விவகாரம் என்பதால் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நிதின் கட்காரிக்கு வந்த கொலை மிரட்டல் வழக்கை என்.ஐ.ஏ. பதிவு செய்துள்ளது. மேலும் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை பெங்களூரு சிறப்பு என்.ஐ.ஏ. கோர்ட்டிற்கு என்.ஐ.ஏ. அனுப்பி வைத்து உள்ளது.


Next Story