மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நாடாளுமன்றத்தில் பரபரப்புடன் தொடங்கியது


மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நாடாளுமன்றத்தில் பரபரப்புடன் தொடங்கியது
x
தினத்தந்தி 8 Aug 2023 9:05 PM GMT (Updated: 9 Aug 2023 1:01 AM GMT)

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பரபரப்புடன் விவாதம் தொடங்கியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது.

நம்பிக்கையில்லா தீர்மானம்

மணிப்பூர் கலவர பிரச்சினையை எழுப்பி, எதிர்க்கட்சிகள் தினந்தோறும் அமளியில் ஈடுபட்டு வந்தன. பிரதமர் மோடி, சபைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

ஆனால், பிரதமர் மோடி சபைக்கு வரவில்லை. எனவே, அவரை பதில் அளிக்க வைப்பதற்காக, 'இந்தியா' கூட்டணி சார்பில் மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்தார்.

அதை சபாநாயகர் ஓம்பிர்லா, விவாதத்துக்கு ஏற்றுக்கொண்டார். ஆகஸ்டு 8-ந் தேதி முதல் 10-ந் தேதிவரை விவாதம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 10-ந் தேதி, பிரதமர் மோடி பதில் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

ராகுல்காந்தி பேசாதது ஏன்?

இந்நிலையில் நேற்று பகல் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 4 மாதங்களுக்கு பிறகு எம்.பி. ஆகியுள்ள ராகுல்காந்தி முதலில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி குறுக்கிட்டு, ''ராகுல்காந்தி முதலில் பேசுவார் என்று பெயர் கொடுத்துவிட்டு, அவர் பெயரை கடைசி நிமிடத்தில் விடுவித்தது ஏன்?'' என்று கேட்டார். அதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

''சபாநாயகர் அறையில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துகளை இங்கு சொல்ல வேண்டும்'' என்று கவுரவ் கோகாய் கூறினார். அதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ''ஆதாரமற்ற கருத்துகளை பேசக்கூடாது'' என்று கண்டித்தார். பா.ஜனதா எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர்.

மணிப்பூர் எரிந்தால் நாடு எரியும்

பின்னர், தீர்மானம் மீது கவுரவ் கோகாய் பேசியதாவது:-

மணிப்பூருக்கு நீதி வேண்டும். ''எந்த இடத்தில் அநீதி நிகழ்ந்தாலும், அது எல்லா இடத்திலும் நீதி கிடைப்பதற்கு அச்சுறுத்தலாக இருக்கும்'' என்று மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் கூறினார்.

அதுபோல், மணிப்பூர் பற்றி எரிந்தால், நாடும் பற்றி எரியும். மணிப்பூர் பிளவுபட்டால், நாடும் பிளவுபடும். 'ஒரே நாடு' என்று பேசும் உங்களால், மணிப்பூர் இரண்டாக ஆகிவிட்டது. மலையில் ஒரு மணிப்பூரும், பள்ளத்தாக்கில் ஒரு மணிப்பூரும் வசிக்கிறது.

மவுன விரதம்

நாட்டின் தலைவர் என்ற முறையில், பிரதமர் மோடி, சபைக்கு வந்து மணிப்பூர் பற்றி பேச வேண்டும். ஆனால், மக்களவையிலும் பேசுவது இல்லை, மாநிலங்களவையிலும் பேசுவது இல்லை என்று மவுன விரதம் கடைபிடிக்கிறார். அவரது மவுன விரதத்தை கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.

அவர் மணிப்பூர் பற்றி பேசுவதற்கு 80 நாட்கள் எடுத்துக் கொண்டார். அதுவும் 30 வினாடிகள்தான் பேசினார். அதன்பிறகு, மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுக்கவில்லை. மந்திரிகள் பதில் அளிப்பார்கள் என்று கூறினாலும், அவற்றுக்கு பிரதமரின் வார்த்தைகளுக்கான வலிமை இருக்காது.

மணிப்பூர் செல்லாதது ஏன்?

ராகுல்காந்தி, அமித்ஷா, நித்யானந்தா ராய் ஆகியோர் மணிப்பூர் ெசன்று வந்துள்ளனர். பிரதமர் இன்னும் அங்கு செல்லாதது ஏன்? 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தை தொடர்ந்து, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் குஜராத்துக்கு சென்றார்.

ஆனால், கொரோனா 2-வது அலையில் பலர் இறந்து கொண்டிருந்தபோது, மேற்கு வங்காளத்தில் பிரதமர் ஓட்டு கேட்டுக்கொண்டிருந்தார். மணிப்பூர் கலவரத்தின்போது, கர்நாடகாவில் ஓட்டு கேட்டார். என்ன தேசியம் இது?

இவ்வாறு அவர் பேசினார்.

டி.ஆர்.பாலு

நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசியதாவது:-

குஜராத் கலவரத்தின்போது, வாஜ்பாய், ராஜதர்மத்தின் பின்னால் நின்றார். ஆனால், பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்களுக்கு பின்னால் நாம் நிற்க முடியவில்லை. மணிப்பூர் நிகழ்வுகளை ஒட்டுமொத்த உலகமும் கண்டிக்கிறது.

பாரத போரில் அர்ஜுனனிடம், ''நீ உன் உறவினர்களை கொல்ல போவதில்லை, தீமைகளைத்தான் கொல்ல போகிறாய்'' என்று கிருஷ்ணர் கூறினார். நானும் அதைத்தான் செய்கிறேன். பிரதமரை சபைக்கு அழைத்துவர இந்த தீர்மானத்தை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை.

தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் பேசுகையில், ''மத்திய அரசு இரக்கமற்ற அரசாக உள்ளது. மணிப்பூருக்கு இதுவரை ஒரு குழு கூட அனுப்பப்படவில்லை. மணிப்பூர் எரிந்து கொண்டிருந்தபோது, பிரதமர் 7 நாடுகளுக்கு சென்றுள்ளார். அவர் நடமாடும் தூதரா? விற்பனை பிரதிநிதியா?

மணிப்பூரின் பிரேன்சிங் அரசு தோல்வி அடைந்துவிட்டது. அந்த அரசை கலைத்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்'' என்று கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, ''மணிப்பூர் முதல்-மந்திரி உடனடியாக பதவி விலக வேண்டும்'' என்று கூறினார்.

மணீஷ் திவாரி

காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி பேசுகையில், ''கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. மணிப்பூர் 3 மாதங்களாக எரிந்து கொண்டிருந்தபோதிலும், அமைதியை நிலைநாட்ட அரசு எதுவுமே செய்யவில்லை'' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. ஆரிப், ''மணிப்பூர் எரிந்து கொண்டிருந்தபோது பிரதமர் பிரான்ஸ் நாட்டுக்கு சென்று உலக அமைதி பற்றி பேசினார்'' என்று கூறினார்.

புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி எம்.பி. பிரேம சந்திரன், ''356-வது பிரிவை பயன்படுத்தி, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த இது பொருத்தமான விவகாரம்'' என்று கூறினார்.

பா.ஜனதா எம்.பி.

மத்திய அரசு தரப்பில் பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே, விவாதத்தின் மீது முதலில் பேசினார். அவர் பேசியதாவது:-

எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கின்றன. தங்களை 'இந்தியா' என்று அழைத்துக் கொள்கின்றன. இந்தியா என்பதன் விரிவாக்கத்தை கேட்டால், அவர்களில் ஒருசிலருக்குத்தான் சொல்ல தெரியும்.

ராகுல்காந்தி வருகை குறித்து எதிர்க்கட்சிகள் பெரிதாக பேசுகின்றன. அவரை சுப்ரீம் கோர்ட்டு விடுவிக்கவில்லை. அவர் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறினார். தான் சாவர்க்கர் அல்ல என்று கூறினார். அவர் எப்போதும் வீர சாவர்க்கர் ஆக முடியாது.

கருணாநிதி அரசு கலைப்பு

கடந்த காலத்தில் காங்கிரசால் குறிவைக்கப்பட்ட கட்சிகள், தற்போது காங்கிரசுடன் கைகோர்த்து நிற்கின்றன. 1976-ம் ஆண்டு, கருணாநிதி அரசை இந்திரா காந்தி கலைத்தார். இருப்பினும், 1980-ம் ஆண்டு, இந்திரா காந்தி அரசை தி.மு.க. ஆதரித்தது.

திரிணாமுல் காங்கிரஸ் மீது காங்கிரஸ் கட்சி ஊழல் புகார் கூறிவருகிறது. லாலுபிரசாத் யாதவ், சிறைக்கு செல்ல காங்கிரஸ் கட்சி காரணமாக இருந்தது. முலாயம்சிங் யாதவ் மீது காங்கிரஸ் கட்சி, சி.பி.ஐ. வழக்குகளை தொடுத்தது. பா.ஜனதா அரசு, அவ்வழக்குகளை ரத்து செய்து, முலாயம்சிங்குக்கு பத்ம விபூஷண் விருது கொடுத்தது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் வழக்கு தொடுத்தனர். ஷேக் அப்துல்லாவுக்கு எதிராக காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.

ஏழைத்தாயின் மகன்

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம், ஒரு ஏழைத்தாயின் மகனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களுக்கு வீடு, குடிநீர், கழிப்பறை, மின்சாரம் கொடுத்தவருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளது.

திரவுபதி துகில் உறியப்பட்டபோது, திருதராஷ்டிரர், பீஷ்மர், துரோணாச்சாரியார் உள்ளிட்டோர் அமைதி காத்தனர். அவர்கள் யாரும் உயிர்தப்பவில்லை.

அதுபோல், மோடி அரசின் கொள்கைகளை துகில் உறியும் எதிர்க்கட்சிகள் எதுவும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திரும்ப வரப்போவதில்லை. பா.ஜனதா, 400 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிஜு ஜனதாதளம்

பிஜு ஜனதாதள எம்.பி. பினாகி மிஸ்ரா, மத்திய அரசுக்கு ஆதரவாக பேசினார். அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் கொண்டு வந்த எந்த தீர்மானத்தையும் நாங்கள் ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. மணிப்பூர் பிரச்சினை, கடந்த 10 ஆண்டுகால நிகழ்வுகளின் வெளிப்பாடு அல்ல. அது, ஐம்பது, அறுபது ஆண்டுகளாக நடக்கும் பிரச்சினையின் வெளிப்பாடு.

மணிப்பூர் பிரச்சினையில் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும். பிரதமர் எப்போது சபையில் பேசினாலும், காங்கிரசை அடித்து துவைத்து விடுகிறார். பிறகு ஏன் காங்கிரஸ் கட்சி அவரை சபைக்கு அழைத்து மூக்குடைபட பார்க்கிறது?

இவ்வாறு அவர் பேசினார்.

கிரண் ரிஜிஜு

மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பேசுகையில், ''எதிர்க்கட்சிகள் தவறான நேரத்தில், தவறான முறையில் இத்தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன'' என்றார்.

சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே, சபையில் அனுமன் கீர்த்தனை பாடினார். இந்துத்துவா கொள்கையையும், பால்தாக்கரே கொள்கையையும் உத்தவ்தாக்கரேயின் சிவசனோ பிரிவு கைவிட்டு விட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

பல மணி நேர விவாதத்துக்கு பிறகு, சபை புதன்கிழமைக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

இன்றும் விவாதம் தொடரும்.


Next Story