அக்னிபத் போராட்டத்திற்கு மத்தியில் ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!


அக்னிபத் போராட்டத்திற்கு மத்தியில் ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
x
தினத்தந்தி 18 Jun 2022 7:33 AM GMT (Updated: 18 Jun 2022 7:33 AM GMT)

அக்னிபத் போராட்டத்திற்கு மத்தியில், ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் இன்று விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த திட்டம் குறித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில், "ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த துடிப்பான, தேசபக்தி கொண்ட இளைஞர்கள், கடந்த 2 ஆண்டுகளாக ஆள் தேர்வு நடக்காததால் ராணுவத்தில் சேர முடியவில்லை.

'அக்னிபத்' திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த உத்தரவு, ராணுவத்துக்கு கிடைத்துள்ளது.

இந்த சலுகையால், மேலும் எண்ணற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். விரைவில் ஆள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். அக்னி வீரர்களாக சேரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

மறுமுனையில், இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

அக்னிபத் போராட்டத்திற்கு மத்தியில், ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு நடைபெற உள்ளது. இதற்காக கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் விமானப்படை தலைமை தளபதி ஏர் சீப் மார்ஷல் விவேக் ராம் சவுதாரி ஆகியோர் பாதுகாப்பு அமைச்சரின் இல்லத்திற்கு வந்தனர்.அவர்களுடன் இன்று விரிவான ஆலோசனை நடத்துகிறார்.


Next Story