ஆத்மநிர்பார் பாரத் ஆக்கும் இரு முக்கிய தூண்களாக பாதுகாப்பு, விண்வெளி துறைகள் உள்ளன: பிரதமர் மோடி


ஆத்மநிர்பார் பாரத் ஆக்கும் இரு முக்கிய தூண்களாக பாதுகாப்பு, விண்வெளி துறைகள் உள்ளன:  பிரதமர் மோடி
x

இந்தியாவை ஆத்மநிர்பார் பாரத் ஆக்கும் இரு முக்கிய தூண்களாக பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகிய துறைகள் உள்ளன என பிரதமர் மோடி இன்று கூறியுள்ளார்.


வதோதரா,


குஜராத்தின் வதோதரா நகரில் இந்திய விமான படைக்கான சி-295 ரக போக்குவரத்து விமானங்களை தயாரித்து வழங்கும் திறன் கொண்ட தனியார் நிறுவனத்தின் தொடக்க விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசை வழங்கி கவுரவம் அளித்தனர். நிகழ்ச்சியில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் கலந்து கொண்டார்.

இதன்படி, சி-295 விமானங்களை டாடா-ஏர்பஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 40 விமானங்கள் தவிர்த்து, இந்த உற்பத்தி மையத்தில் விமான படைக்கு தேவையான மற்றும் ஏற்றுமதிக்கான கூடுதல் விமானங்களும் தயாரிக்கப்படும் என பாதுகாப்பு செயலர் அரமானே கிரிதர் கூறியுள்ளார்.

இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் சி-295 விமானம் உயரிய திறன்களுடன் மற்றும் சர்வதேச தரத்துடன் இருக்கும். இந்திய விமான படையின் தளவாட திறனை மேம்படுத்தும் வகையில் அது முக்கியத்துவம் பெற்றிருக்கும் என மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது கூறினார்.

இதுவரை அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், உக்ரைன், பிரேசில், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய குறிப்பிட்ட நாடுகளே ராணுவ போக்குவரத்து விமானங்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்த நாடுகளாக உள்ளன.

அந்த வகையில் சி-295 ரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. இதனை நாட்டின் முதல் தனியார் விமான உற்பத்தி நிறுவனம் தயாரிப்பதுடன், இந்தியாவும் அந்த நாடுகளின் வரிசையில் இடம் பெற்று உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, இந்த உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்படும் போக்குவரத்து விமானங்கள், நமது ராணுவத்துக்கு சக்தி அளிப்பது மட்டுமின்றி விமான உற்பத்தியில் ஒரு புதிய சூழல்முறையையும் உருவாக்கும்.

ஒவ்வொரு துறையிலும் முன்னணியில் செயல்படும் நோக்குடன் நாடு முன்னேறி வருகிறது என்றும் பிரதமர் மோடி அழுத்தி கூறினார். 2025-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு பொருட்களின் தயாரிப்பு அளவானது ரூ.2.05 லட்சம் கோடியை கடந்து இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் நிறுவப்பட்டு உள்ள பாதுகாப்பு தொழிற்கூடங்கள் இந்த அளவை அதிகரிக்க செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story