அரியானாவில் விசா கிடைப்பதில் காலதாமதம்; விரக்தியில் மாணவர் தற்கொலை


அரியானாவில் விசா கிடைப்பதில் காலதாமதம்; விரக்தியில் மாணவர் தற்கொலை
x

அரியானாவில் நண்பருக்கு கிடைத்த விசா தனக்கு கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதில் விரக்தி அடைந்து, மாணவர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது.



சண்டிகர்,



அரியானாவின் குருஷேத்திரா மாவட்டத்தில் கோர்கா கிராமத்தில் வசித்து வந்த இளைஞர் விகேஷ் சைனி என்ற தீபக் (வயது 23). இவர், பட்டப்படிப்பு முடித்துள்ளார். கனடாவில் படிப்பை தொடர்ந்து, அந்த நாட்டிலேயே வாழ்க்கையை கழிக்க விரும்பியுள்ளார். இதற்கான விசா பெற விண்ணப்பித்து உள்ளார்.

ஆனால், தீபக்கிற்கு மாணவருக்கான விசா வருவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஜன்சா நகரருகே உள்ள கால்வாய் ஒன்றில் குதித்து அவர் தற்கொலை செய்துள்ளார்.

கால்வாயின் அருகே தீபக்கின் காலணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் கிடந்துள்ளன. இதனை தொடர்ந்தே, மீட்பு பணியாளர்கள் கால்வாய்க்குள் இறங்கி அவரது உடலை மீட்டு உள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் தீபக்கின் உடலை, குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்து உள்ளனர்.

இதுபற்றிய போலீசாரின் விசாரணையில், தீபக்கின் நண்பருக்கு மாணவர் விசா உடனடியாக கிடைத்து விட்டது. ஆனால், தீபக்குக்கு கிடைக்காமல் இருந்துள்ளது. இதில் விரக்தி அடைந்த தீபக், தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதனடிப்படையில் வழக்கு பதிவும் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி கோர்கா கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் தீபக்கின் குடும்ப நண்பரான குர்னம் சிங் கூறும்போது, தீபக்கின் விசா கடந்த வியாழ கிழமை வந்துள்ளது.

ஆனால், அதற்கு 2 நாட்களுக்கு முன்பே அவர் காணாமல் போயுள்ளார். தீபக்கின் நண்பருக்கு கனடா செல்வதற்கான மாணவர் விசா வந்துள்ளது. ஆனால், தீபக்கிற்கு வருவதற்கு காலதாமதம் ஆகியுள்ளது. அவரது குடும்பத்தினரும் தங்களது மகனை கனடா நாட்டுக்கு அனுப்பி வைக்க விரும்பியுள்ளனர் என கூறியுள்ளார்.

தீபக்கிற்கு ஒரு சகோதரர் மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். அவரது தந்தை அரசு பணியில் உள்ளார். தீபக்கை இழந்த சோகத்தில் அவரது குடும்பம் உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும், மாணவர் விசா பெறுவதில் காலதாமதங்கள் ஏற்பட்டு உள்ளன. இதுபற்றி பல்வேறு நாடுகளின் குடியுரிமை அலுவலகங்களும் மாணவர்களுக்கு தகவல்களை அனுப்பி வருகின்றன.

இந்திய மாணவர்களுக்கு விசாக்களை எளிதில் கிடைக்க செய்வதற்கான ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, ஜெர்மனி, நியூசிலாந்து, போலந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மூத்த தூதர்களுடன் நடத்தியுள்ளோம் என சமீபத்தில் மத்திய வெளிவிவகார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், விசா கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்திற்காக மாணவர் ஒருவர் தற்கொலை முடிவை எடுத்திருப்பது, அவரது குடும்பத்தினரிடையே சோகம் ஏற்படுத்தி இருப்பதுடன், அந்த பகுதியில் வசிப்போரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Next Story