பிரைடு ரைஸ் கொண்டுவர தாமதம் - வாடிக்கையாளர்கள் முன்னிலையில் ஓட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய கும்பல் கைது!


பிரைடு ரைஸ் கொண்டுவர தாமதம் - வாடிக்கையாளர்கள் முன்னிலையில் ஓட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய கும்பல் கைது!
x

வாடிக்கையாளர்கள் முன்னிலையில் ஓட்டல் உரிமையாளரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

மூணாறு,

கேரள மாநிலம் மூணாறு சுற்றுலா தலத்தில் ஓட்டல் நடத்தி வருபவர் பிரசாந்த் (வயது 54). இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33) என்ற வாலிபர் சாப்பிட வந்தார். அவர் பிரைடு ரைஸ் ஆர்டர் செய்தார்.

ஊழியர்கள் பிரைடு ரைஸ் தயாரித்து கொண்டு வர தாமதம் ஆனது. இதுபற்றி மணிகண்டன், ஓட்டல் உரிமையாளர் பிரசாந்திடம் கேட்டார். அவர் சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், அங்கிருந்தபடி தனது நண்பர்களுக்கு போன் செய்து ஓட்டலுக்கு வரவழைத்தார். அவர்கள் வந்ததும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் ஓட்டல் உரிமையாளரை சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் தாக்கினர். ஓட்டலையும் சூறையாடினர்.

இதில் ஓட்டல் உரிமையாளர் பிரசாந்த், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மூணாறு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட மணிகண்டன், அவரது நண்பர்கள் ஜான் பீட்டர், தாமஸ்,சின்னப்ப ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story