டெல்லி காற்று மாசுபாடு: ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு; எச்சரிக்கும் மருத்துவர்
டெல்லியில் காற்று மாசுபாட்டால் ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என மருத்துவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
புதுடெல்லி,
தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலக அளவில் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது. இந்தியாவிலும் இது அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், மனிதர்களுக்கு நோய் தொற்றுகள், வாழ்நாள் முழுவதும் பாதிப்பு ஆகியன ஏற்படுவதுடன், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் காற்று தர குறியீடு அமைப்பு, உலக அளவில் மேற்கொண்ட ஆய்வின் பயனாக சமீபத்தில் வெளியிட்டு உள்ள தகவலின்படி, உலக அளவில் அதிக காற்று மாசுபாடுடைய நகரங்களை கொண்ட நாடுகளின் வரிசையில் கத்தாருக்கு அடுத்து இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
இதில், தீபாவளி நாளில் அதிக மாசுபாடுடைய நகரங்களின் வரிசையில் டெல்லி முதல் இடம் பிடித்து உள்ளது என தெரிவித்து உள்ளது. உலக காற்று தர குறியீடு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10-ல் இடம் பெற்று அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில், வேளாண் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வு போன்ற காரணிகளாலும் தலைநகர் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது என கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லி மேதாந்தா மருத்துவமனையின் தலைவர் மற்றும் டாக்டரான அரவிந்த் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, டெல்லியில் மருத்துவமனைக்கு வரும் மக்கள் கண்கள் வறண்டு காணப்படுகிறது. கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. கண்கள் சிவந்து, நீர் கசிந்து மற்றும் வறட்சியான கண்கள், மூக்கில் எரிச்சல் மற்றும் உதடுகளில் வித்தியாச சுவையுணர்வு உள்ளிட்ட பொதுவான பாதிப்புகளுடன் வருகின்றனர்.
நீங்கள் உங்களுடைய நாக்கை தொட்டால், உலோக பொருளை தொட்ட ஒரு சுவை ஏற்படும். தொண்டை வறட்சியும் கூட காணப்படும். எங்களது ஐ.சி.யூ.வுக்கு நெஞ்சு பாதிப்புகள், நிம்மோனியா பாதிப்பு என கூறி கொண்டு அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகின்றனர்.
காற்று மாசுபாடு அதிகரிக்கும்போது இதுபோன்று பாதிப்புகள் அதிகரித்து காணப்படுவதற்கான சான்றுகள், ஆவணப்படுத்தி வைக்கப்பட்ட உண்மையாகவே உள்ளது. நிம்மோனியா, நெஞ்சு பாதிப்புகளால் ஐ.சி.யூ.வில் சேரும் மக்களின் எண்ணிக்கை சாதனை பதிவை எட்டியுள்ளது.
குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் அதிக எரிச்சலூட்டுபவையாக உள்ளது. அது நரம்பு செல்களில் எரிச்சலை உண்டு பண்ணும் என நினைக்கிறேன். ஏனெனில் காற்று மாசுபாட்டால், அதில் கலந்த நச்சு பொருட்களால் அவை ஏற்படுகின்றன.
இதேபோன்று, வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு ஸ்டிரோக் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து 10 மடங்கு அதிகரித்து உள்ளது என அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.