டெல்லியில் பயங்கர தீ விபத்து: 7 பேர் பலி
சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லி அலிபூர் மார்க்கெட்டில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்து விரைந்து வந்த 6 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் பெயிண்ட் தொழிற்சாலை என்பதால் ரசாயனங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தீயின் தாக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்தது. இதையடுத்து கூடுதலாக 14 தீயணைப்பு வாகனங்கள் வரவைழக்கப்பட்டன. தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இருப்பினும் அந்த பகுதியில் கரும்புகை அதிகளவில் சூழ்ந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் தொழிற்சாலை தீவிபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. அவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும் தற்போது வரை தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஆனாலும் தீவிபத்துக்கு முன்பு தொழிற்சாலையில் பயங்கர வெடிசத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதுதான் தீவிபத்துக்கு காரணமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது பற்றி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.