டெல்லியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்: பாஜக குற்றச்சாட்டு
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் கெஜ்ரிவால் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
புதுடெல்லி,
டெல்லியில் மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டிய பாஜக, இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. பாஜக எம்.பி பர்வேஷ் வெர்மா தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர் மாசடைந்த குடிநீர் அடைக்கப்பட்ட பாட்டில்கள் மற்றும் பதாகைகள் ஏந்தியபடி தலைமைச்செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பர்வெஷ் வெர்மா, டெல்லியில் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. ஆனால், முதல் மந்திரி பிற மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபடுவதில்தான் அக்கறை காட்டுகிறார். சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதால் மக்கள் உடல் நல பாதிப்புகளை சந்திக்கின்றனர். எனவே, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் கெஜ்ரிவால் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.